`பலமுறை எச்சரித்தேன், ஒரு பொருட்டாகவே எடுத்துக்கல!'- காதல் மனைவியைக் கொன்ற கணவன் வாக்குமூலம் | husband kills his wife for illegal relationship

வெளியிடப்பட்ட நேரம்: 11:29 (17/04/2019)

கடைசி தொடர்பு:14:08 (17/04/2019)

`பலமுறை எச்சரித்தேன், ஒரு பொருட்டாகவே எடுத்துக்கல!'- காதல் மனைவியைக் கொன்ற கணவன் வாக்குமூலம்

காதல் மனைவியின் தலையை அறுத்து, உடலை பைக்கில் வைத்து ஊர்வலமாக வந்த கணவனின் செயலைக் கண்டு ஈரோடு மக்கள் மிரண்டுபோய்க் கிடக்கின்றனர்.

கொலை செய்யப்பட்ட மனைவி

கர்நாடக மாநிலம் ஷிமோகா நகரைச் சேர்ந்தவர் முனியப்பன் (28). இவர் அதே பகுதியைச் சேர்ந்த நிவேதா (19) என்பவரைக் கடந்த ஏழு மாதத்துக்கு முன்பு காதல் திருமணம் செய்திருக்கிறார். அதன்பிறகு ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த வேப்பம்பாளையம் பகுதியில் ஒரு வாடகை வீட்டை எடுத்து இருவரும் வசித்து வந்திருக்கின்றனர். முனியப்பன் கேஸ் லாரியில் சிலிண்டர் ஏற்றும் லோடுமேன் ஆகவும், நிவேதா சூப்பர் மார்க்கெட் ஒன்றில் சேல்ஸ்வுமனாகவும் வேலை செய்து வந்திருக்கிறார்கள்.

ஏப்ரல் 15-ம் தேதி இரவு வேலைக்குச் சென்ற முனியப்பன், வேலை குறைவாக இருந்த காரணத்தால் இரவு 10 மணியளவில் வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார். அப்போது அவருடைய மனைவி நிவேதா, இளைஞர் ஒருவருடன் வீட்டில் இருந்ததைக் கண்டு அதிர்ந்து போயிருக்கிறார். இதையடுத்து, இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. `இனிமேல் நான் உன்னுடன் வாழ முடியாது. உன்னுடைய அம்மா வீட்டில் உன்னை விட்டுவிடுகிறேன் வா!’ என மனைவியை பைக்கில் ஏற்றிக்கொண்டு கோபத்தோடு கிளம்பியிருக்கிறார் முனியப்பன். பவானி தேசிய நெடுஞ்சாலையில் எருக்கங்காட்டு வலசு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது இருவருக்குமிடையே மேலும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

தேசிய நெடுஞ்சாலையில் பைக்கை ஓரம்கட்டிய முனியப்பன், பைக்கில் மறைத்து வைத்துக் கொண்டு வந்திருந்த கத்தியால் நிவேதாவை குத்த முயற்சி செய்திருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே நடந்த மல்லுக்கட்டால், முனியப்பன் காதில் கத்தி வெட்டு விழுந்திருக்கிறது. இதையடுத்து உஷ்ணமான முனியப்பன், நிவேதாவை கீழே தள்ளி தலையை துண்டாக வெட்டி எடுத்திருக்கிறார். அதன்பிறகு மனைவியின்  தலையை பைக்கில் தொங்கவிட்டும், உடலை பெட்ரோல் டேங்கின் மீது வைத்து பைக்கில் வந்திருக்கிறார். பயத்திலும், பதற்றத்திலும் வண்டியை ஓட்டி வந்த முனியப்பன் ஒருகட்டத்தில் நிலைதடுமாறி ஒரு வீட்டுச் சுவரின் மீது மோதி கீழே விழுந்திருக்கிறார்.

இதைப்பார்த்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பதறிப்போய் போலீஸாருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். சம்பவ இடத்துக்கு வந்த பெருந்துறை போலீஸார் முனியப்பனை கைது செய்து, நிவேதாவினுடைய உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவியை கொலை செய்த முனியப்பன்

‘நிவேதா அடிக்கடி போனில் பேசி வந்தபோதே நான் பலமுறை எச்சரித்திருக்கிறேன். ஆனால், அவள் நான் சொன்னதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. சம்பவம் நடந்த அன்று, இளைஞர் ஒருவருடன் வீட்டில் இருந்ததைக் கண்டு எனக்குக் கோபம் தலைக்கேறியது. அவளைக் கொன்றுவிட வேண்டுமென்று முடிவுசெய்து கத்தியை மறைத்து எடுத்துக்கொண்டு, அவளுடைய அம்மா வீட்டில் விட்டுவிடுவதாகச் சொல்லி ஏமாற்றி அழைத்துச் சென்றேன். நெடுஞ்சாலை ஓரமாக அவளைக் கொலை செய்த பின்னர், எங்கேயாவது அவளது உடலை வீசிவிடலாம் என பைக்கிலேயே  உடலை உட்கார வைத்து எடுத்துச் சென்றபோது, நிலைதடுமாறி கீழே விழுந்து பொதுமக்களிடம் மாட்டிக் கொண்டேன்’ என போலீஸாரிடம் முனியப்பன் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த போலீஸார், முனியப்பனை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

தவறான தொடர்பால் மனைவியின் தலையை வெட்டிக்கொலை செய்த கணவன், உடலை பைக்கில் ஊர்வலமாக எடுத்துச் சென்ற சம்பவம் ஈரோடு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.