`கதறினேன்; அவர் காதில் விழவில்லை!'- குழந்தையைப் பறிகொடுத்த தந்தை கண்ணீர் | kid death in accident

வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (17/04/2019)

கடைசி தொடர்பு:13:10 (17/04/2019)

`கதறினேன்; அவர் காதில் விழவில்லை!'- குழந்தையைப் பறிகொடுத்த தந்தை கண்ணீர்

செங்கல் சூளைக்குள் நுழைந்த மினிலாரி, வீட்டின் வாசலில் படுத்திருந்த குழந்தை வசந்தகுமார் மீது ஏறி இறங்கியது. வசந்தகுமாரைக் காப்பாற்ற செங்கல் சூளைக்குள் வேலை பார்த்திருந்தவர்கள் ஓடிவந்தனர். ஆனால், குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை. 

செங்கல் சூளையில் பலியான குழந்தை மாதிரி படம்

திருவள்ளூரை அடுத்த கோயம்பாக்கம் கிராமத்தில் செங்கல் சூளை செயல்பட்டுவருகிறது. இந்தச் சூளையில் விழுப்புரம் மாவட்டம், கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் (28) குடும்பத்துடன் வேலை பார்த்துவருகிறார். இவரின் மனைவியும் அதே செங்கல் சூளையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். இந்தத் தம்பதிக்கு சந்துரு, வசந்தகுமார் (7 மாதம்) என இரண்டு மகன்கள். வழக்கம்போல கணவனும் மனைவியும் செங்கல் சூளைக்கு வேலைக்குச் சென்றனர். செங்கல் சூளையில் உள்ள வீட்டில்தான் இவர்கள் வசித்துவந்தனர். அப்போது குழந்தை வசந்தகுமாரை வீட்டின் முன் படுக்க வைத்திருந்தனர். 

இந்த நிலையில், செங்கல் சூளையில் வேலை பார்க்கும் மணிமாறன் என்பவர் மினிலாரியை ஓட்டிவந்தார். வீட்டின் வாசலில் வசந்தகுமார் படுத்திருப்பதை அவர் கவனிக்கவில்லை. மினிலாரி வருவதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்கள் சத்தம் போட்டனர். ஆனால், அந்தச் சத்தம் மணிமாறனின் காதில் விழவில்லை. 

செங்கல் சூளையில் பலியான குழந்தை மாதிரி படம்

வசந்தகுமார் மீது ஏறி இறங்கின மினிலாரியின் சக்கரங்கள். இதனால் உடல் நசுங்கி குழந்தை வசந்தகுமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். மினிலாரியை நோக்கி அங்குள்ளவர்கள் சத்தம் போட்டபடியே ஓடிவருவதைக் கவனித்த மணிமாறன், லாரியை நிறுத்தினார். அப்போதுதான் குழந்தையின் மீது லாரி ஏறியதை அவர் கவனித்தார்.

காமராஜும், அவரின் மனைவிக்கும் தகவல் தெரிந்து அவர்களும் அலறியடித்து சம்பவ இடத்துக்கு ஓடிவந்தனர். நிலைமை விபரீதமானதையறிந்த மணிமாறன், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உடல் நசுங்கிய நிலையில் உயிருக்குப் போராடிய வசந்தகுமாரை, தூக்கிக் கொண்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். அப்போது வசந்தகுமாரை பரிசோதித்த டாக்டர்கள், இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அதைக்கேட்டு குழந்தையின் பெற்றோரும் செங்கல் சூளையில் வேலை பார்த்தவர்களும் கதறி அழுதனர். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த வெள்ளவேடு போலீஸார், திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். வசந்தகுமாரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதையடுத்து, டிரைவர் மணிமாறனை போலீஸார் தேடிவருகின்றனர். 

  செங்கல் சூளையில் குழந்தை பலி மாதிரி படம்

திருவள்ளூர் அரசு மருத்துவமனையின் பிணவறையின் முன் காத்திருந்த செங்கல் சூளையில் வேலை பார்ப்பவர்களிடம் பேசினோம். ``விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பலர் திருவள்ளூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள செங்கல் சூளைகளில் மாதக்கணக்கில் தங்கியிருந்து குடும்பத்துடன் வேலை பார்த்துவருகின்றனர். செங்கல் சூளையில் அமைக்கப்பட்டிருக்கும் குடிசை வீடுகளில்தான் நாங்கள் தங்கியுள்ளோம். சம்பவத்தன்றுகூட காமராஜரும் அவரின் மனைவியும் 7 மாத குழந்தை  வசந்தகுமாரை வீட்டின் வாசலில் படுக்கவைத்துவிட்டு செங்கல் சூளையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்கள் மட்டுமல்ல கைக்குழந்தைகள் வைத்திருப்பவர்கள் அப்படித்தான் வேலைசெய்வார்கள். 

 செங்கல் சூளைக்குள் மினிலாரியை ஓட்டிவந்த மணிமாறன், வசந்தகுமார் தரையில் படுத்திருப்பதைக் கவனிக்கவில்லை. இதனால்தான் அப்படியொரு அசம்பாவித சம்பவம் நடந்துவிட்டது. குழந்தையின் அருகில் மினிலாரி வருவதைப்பார்த்து நாங்கள் கதறினோம், கத்தினோம். வசந்தகுமாரைக் காப்பாற்ற நாங்களும் காமராஜரும் அவரின் மனைவியும் ஓடி வந்தனர். அதற்குள் லாரியின் சக்கரம் ஏறி இறங்கிவிட்டது. அதைப் பார்த்து காமராஜ் கதறினார். எங்களின் உயிருக்குன்னா என்னசார் மதிப்பு இருக்கிறது. தினமும் ஆபத்துடன் வேறுவழியின்றி இந்த வேலையை செய்துவருகிறோம்"  என்றனர் கண்ணீருடன். 

வீட்டின் வாசலில் படுத்திருந்த குழந்தை மீது மினிலாரி ஏறிய சம்பவம் செங்கல் சூளையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.