`பூத்களில் மோடி கேமரா வைத்திருக்கிறார்; உங்களைக் கவனிப்பார்”- அச்சுறுத்திய பா.ஜ.க எம்.எல்.ஏ | modi has installed camera, BJP MLA controversy speech

வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (17/04/2019)

கடைசி தொடர்பு:13:25 (17/04/2019)

`பூத்களில் மோடி கேமரா வைத்திருக்கிறார்; உங்களைக் கவனிப்பார்”- அச்சுறுத்திய பா.ஜ.க எம்.எல்.ஏ

இந்தியா முழுவதும் தற்போது தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த  நிலையில், நாளை 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நேற்று மாலையுடன் 2 -ம் கட்டத் தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது. மற்ற இடங்களில் தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. 

மோடி - ராகுல்

மூன்றாம் கட்டத் தேர்தல் நடைபெறும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தில் உள்ளது. குஜராத் மாநிலத்தில் ஃபெடேஃபுரா தொகுதியின் எம்.எல்.ஏ ரமேஷ் கடாரா. பா.ஜ.க வைச் சேர்ந்த இவர் தாஹோத் மக்களவைத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் ஜஷ்வந்த் சிங் பாபார் என்பவரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். 

அப்போது அத்தொகுதி மக்களிடம் பேசிய அவர்,  ``நீங்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஜஷ்வந்த் புகைப்படம் மற்றும் தாமரைச் சின்னத்தைக் காணலாம். அதற்கு நேராக இருக்கும் பட்டனை அழுத்த வேண்டும். இதில் எந்தத் தவறும் நடக்கக்கூடாது. மோடி கேமராக்கள் பொருத்தியுள்ளார். யார் பா.ஜ.க-வுக்கு வாக்களித்தீர்கள், யார் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தீர்கள் என்பதையெல்லாம் பார்க்க முடியும். எல்லாரிடமும் ஆதார் கார்டு இருக்கிறது. அதில் புகைப்படமும் இருக்கிறது.

பாஜக எம்.எல்.ஏ ரமேஷ்

உங்கள் மையங்களில் எங்கள் கட்சிக்கு குறைவான வாக்குகள் பதிவானால், அப்போது அவருக்குத் தெரிந்துவிடும் யார் யார் வாக்களிக்கவில்லை என்று. அதனால் உங்களுக்கு வேலை கிடைக்காமல் போகும்” என்று பேசினார். இவரது பேச்சு தற்போது சர்ச்சையாகியுள்ளது. 

முன்னதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி,  ``கிராமங்களில் பா.ஜ.க வுக்கு வாக்களித்தவர்களை பல்வேறு பிரிவுகளில் பிரிப்போம். 80 சதவிகிதத்துக்கு மேல் பா.ஜ.க-வுக்கு வாக்களித்த கிராமம் `ஏ’ பிரிவென்றும், 60 சதவிகிதம் பா.ஜ.க-வுக்கு வாக்களித்த கிராமம் பி பிரிவிலும் 50 சதவிகிதத்துக்கும் கீழ் பா.ஜ.க-வுக்கு வாக்களித்த கிராமம் சி பிரிவிலும் வைக்கப்படும். இதன் அடிப்படையில் நலத்திட்டங்கள் வழங்கப்படும்” என்று பேசினது சர்ச்சையானது. அதைத் தொடர்ந்து தற்போது குஜராத் எம்.எல்.ஏ பேசியதும் சர்ச்சையாகியுள்ளது.