`பணப்பட்டுவாடா செய்தவர்களைப் போட்டியிட அனுமதிக்க வேண்டுமா? - நீதிபதிகள் காட்டமான கேள்வி | Chennai Hc justice question about vellore election cancelled

வெளியிடப்பட்ட நேரம்: 13:55 (17/04/2019)

கடைசி தொடர்பு:15:46 (17/04/2019)

`பணப்பட்டுவாடா செய்தவர்களைப் போட்டியிட அனுமதிக்க வேண்டுமா? - நீதிபதிகள் காட்டமான கேள்வி

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நாளை (ஏப்ரல் 18) நடைபெறுகிறது. இதற்காக வேலூர் மாவட்டத்தில் அதிக அளவு பணப்பட்டுவாடா நடந்ததாகவும் அதனால் அங்கு தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. பரிந்துரையை ஏற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று மாலை ஆறு மணிக்குப் பிறகு வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார்.

ஏ.சி.சண்முகம்

இது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தல் ரத்துக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், வேலூரில் தி.மு.க சார்பில் போட்டியிடும் கதிர் அனந்த், திட்டமிட்டபடி வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை நடத்த வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து, தேர்தலை நடத்தக்கோரி அ.தி.மு.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

சென்னை உயர் நீதிமன்றம்

இது அவசர வழக்காக இன்று காலை நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. நீண்ட நேரம் நடந்த இந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள் பல கேள்விகளை எழுப்பினர். ``தேர்தலை நடத்த வேண்டும் என்றால் பணப்பட்டுவாடா செய்தவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டுமா. வெற்றிபெற்ற வேட்பாளரைத்தான் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தகுதி நீக்கம் செய்ய முடியும். மாறாகத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை எப்படி தகுதி நீக்கம் செய்ய முடியும்?'' எனத் தொடர் கேள்விகளை எழுப்பினர். பின்னர் வேலூர் தேர்தல் ரத்து என்பது தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி, இந்த வழக்கின் தீர்ப்பை இன்று மாலை 4:30 மணிக்கு ஒத்திவைத்துள்ளனர்.