`வெளியூரில் ஓட்டு போட முடியாது!'- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது தேர்தல் ஆணையம் | wrong information about shifting vote

வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (17/04/2019)

கடைசி தொடர்பு:16:15 (17/04/2019)

`வெளியூரில் ஓட்டு போட முடியாது!'- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது தேர்தல் ஆணையம்

‘நீங்கள் வெளியூரா... சென்னையில் அல்லது வேறு ஊரில் வசிப்பவரா... வாக்களிக்க சொந்த ஊருக்குச் செல்ல முடியவில்லையா... கவலையே வேண்டாம், தங்கள் வசிப்பிடத்துக்கு அருகிலேயே நீங்கள் ஓட்டு போடலாம்’ என்கிற ஒரு தகவல் வாட்ஸ்அப்பில் கடந்த சில நாள்களாகப் பரப்பப்படுகிறது. அந்தத் தகவல் தவறானது என்பது தேர்தல் ஆணைய வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது தெரியவந்தது.

ஓட்டு போடும் மின்னணு இயந்திரம்

அந்த வாட்ஸ்அப் தகவலில், national voters service portal (nvsp) என்ற இணையதளத்துக்குச் சென்று படிவம் 6-ஐ பூர்த்திசெய்து சமர்ப்பிப்பதன் மூலம் உங்கள் இருப்பிடத்துக்கு அருகிலேயே வாக்களிக்க முடியும். வாக்காளர் அடையாள அட்டை, மார்பளவு புகைப்படம், தற்போதைய முகவரிச் சான்று, பிறந்த தேதிக்கான சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். அப்படி சமர்ப்பித்த பிறகு, உங்கள் மொபைல் நம்பருக்கு Ref No. அனுப்பப்படும். பின்னர், சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலரால் உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, புதிய இடத்தில் வாக்குச்சாவடி ஒதுக்கப்படும். அங்கு நீங்கள் வாக்களிக்கலாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணைய வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, “வேலை நிமித்தமாக வெளியூரில் குடியேறியவர்களும், திருமணமாகி கணவன் வீட்டுக்குச் செல்லும் பெண்களும், தற்போது தாங்கள் வசிக்கும் இடத்திலேயே வாக்களிக்க விரும்பினால், தங்கள் பெயரை புதிய இடத்துக்கு மாற்றிக்கொள்ளலாம். nvsp இணையதளத்துக்குச் சென்று படிவம் 6-ஐ பூர்த்திசெய்து, தேவையான ஆவணங்களின் நகல்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன்மூலம், பழைய இடத்தில் வாக்காளர் பட்டியலில் இருக்கும் உங்கள் பெயரை நீக்கிவிட்டு, தற்போது வசிக்கும் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் சேர்த்துவிடலாம். ஆனால், அடுத்த வாரம் தேர்தல் வரப்போகிறது, இந்த வாரம் தொகுதியை மாற்றிக்கொள்ளலாம் என்று தங்கள் அவசரத்துக்கு இதைச் செய்ய முடியாது.  இதற்கென ஒரு கால வரையறை உண்டு” என்றனர். 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க