வீட்டுக்குள் செல்ல எடுத்த விபரீத முடிவு - 14-வது மாடியிலிருந்து விழுந்த இன்ஜினீயர்  | youth died after slipped from 14th floor in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 19:49 (17/04/2019)

கடைசி தொடர்பு:19:49 (17/04/2019)

வீட்டுக்குள் செல்ல எடுத்த விபரீத முடிவு - 14-வது மாடியிலிருந்து விழுந்த இன்ஜினீயர் 

இன்ஜினீயர் மாணவர் மரணம்

சமூக வலைதளத்தில், அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ரத்த வெள்ளத்தில் ஒருவர் உயிருக்குப் போராடும் வீடியோ வைரலாகியது. அந்த வீடியோகுறித்து விசாரித்தபோது, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதுவும் வீட்டின் சாவியை மறந்த இன்ஜினீயர் எடுத்த விபரீத முயற்சியால் அவர் பலியான சம்பவம் நெஞ்சைப் பதறவைக்கிறது. 

 காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூரை அடுத்த காலவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அதில் 14 மாடிகள் உள்ளன. இந்தக் குடியிருப்பில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள், 14-வது மாடியில் உள்ள வீட்டில்  தங்கியிருந்தனர். இவர்கள், பையனூரில் உள்ள இன்ஜினீயரிங் கல்லூரியில் படித்துவந்தனர். 

விடுமுறை என்பதால், சிலர் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர். கேரளாவைச் சேர்ந்த முகமது அஃப்ரிடி, முகமது நசீர் ஆகியோர் மட்டும் ஊருக்குச் செல்லவில்லை. இந்த நிலையில், கடந்த 14-ம் தேதி வீட்டுக்குள் சாவியை மறந்துவைத்துவிட்டு முகமது அப்ரிடி மற்றும் முகமது நசீர் ஆகியோர் வெளியில் சென்றனர். 

 திரும்ப வீட்டுக்கு வந்தபோதுதான் சாவி இல்லாதது அவர்களுக்குத் தெரியவந்தது. இதையடுத்து, எப்படி வீட்டுக்குள் செல்லலாம் என்று மாணவர்கள் யோசித்தனர். அப்போதுதான், மொட்டை மாடியிலிருந்து வீட்டின் பால்கனிக்கு கயிறு மூலம் இறங்கிவிடலாம் என்று திட்டமிட்டுள்ளனர். உடனடியாக முகமது அஃப்ரிடி, கயிற்றை கட்டிக்கொண்டு பால்கனியில் இறங்கினார். அப்போது கயிறு அறுந்து, அஃப்ரிடி 14-வது மாடியிலிருந்து கீழே விழுந்தார். அதில், அவரின் தலை சிதறியது. அதைப்பார்த்த முகமது நசீரும் அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்பவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். 

 இன்ஜினீயர் மாணவர்

 முகமது நசீர், அவசர அவசரமாகக் கீழே இறங்கிவந்தார். முகமது அஃப்ரிடியை மீட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசென்றனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, திருப்போரூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். 

 இந்தச் சம்பவம்குறித்து போலீஸார் கூறுகையில், ``முகமது அஃப்ரிடி, இன்ஜினீயரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவருகிறார். சம்பவத்தன்று, சாவி இல்லாததால் வீட்டுக்குள் மாணவர்களால் செல்ல முடியவில்லை. இதனால்தான் இந்த விபரீத முயற்சியை அவர்கள் எடுத்துள்ளனர். முகமது அஃப்ரிடி, மொட்டைமாடியிலிருந்து கயிறுமூலம் கீழே இறங்கியுள்ளார். அப்போது, அவரின் எடை தாங்காமல் கயிறு அறுந்துள்ளது. இதனால், 14-வது மாடியிலிருந்து முகமது அஃப்ரிடி கீழே விழுந்துவிட்டார். அதில், அவரின் தலை சிதறி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இந்தச் சம்பவம்குறித்து விசாரித்துவருகிறோம்" என்றனர். 

 14-வது மாடியிலிருந்து இன்ஜினீயரிங் மாணவர் கீழே விழுந்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.