வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகம்! - விளாத்திகுளம் சுயேச்சை வேட்பாளர் மீது வழக்கு | The case filled for independent candidate who distributed tokken to voters in vilathikulam

வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (17/04/2019)

கடைசி தொடர்பு:20:50 (17/04/2019)

வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகம்! - விளாத்திகுளம் சுயேச்சை வேட்பாளர் மீது வழக்கு

விளாத்திகுளத்தில், வாக்காளர்களுக்குப் பணம் வழங்குவதற்காக டோக்கன் விநியோகித்த முன்னாள் எம்.எல்.ஏ-வும் சுயேச்சை வேட்பாளருமான மார்க்கண்டேயன் உள்ளிட்ட 2 பேர்மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில், நாடாளுமன்றத் தொகுதி தேர்தலுடன் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இத்தொகுதியில் 1,02,885 ஆண் வாக்காளர்களும், 1,05,946 பெண் வாக்காளர்களும், 2 பிற வாக்காளர்களும் என மொத்தம் 2,08,833 வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதியில், தி.மு.க சார்பில் ஜெயகுமார், அ.தி.மு.க., சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ சின்னப்பன், அ.ம.மு.க சார்பில் ஜோதிமணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இத்தொகுதியின் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ மார்கண்டேயனுக்கு இந்த முறை சீட்  வழங்கப்படாததால், சுயேச்சையாக களத்தில் இறங்கியுள்ளார். பிரசாரத்தில், “என்னிடம் ரூ.10 கோடி பேரம் பேசினார்கள். தேர்தலுக்குப் பிறகு வாரியத் தலைவர் பதவியெல்லாம் தருவதாகச் சொன்னார்கள்” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். அதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், விளாத்திகுளத்தில் உள்ள  இவருக்குச் சொந்தமான 'அம்பாள் கோசாலை' என்ற இடத்தில், வாக்காளர்களுக்குப் பணம் வழங்குவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலரும், தேர்தல் பறக்கும்படை அதிகாரியுமான பீவி சம்பவ இடத்திற்கு விரைந்தார். கோசாலை அமைந்துள்ள அம்பாள்நகர் பகுதிக்குள் நுழையும்போது, அங்கிருந்து ஒரு கார் வெளியே வந்தது. பறக்கும்படையின் வாகனத்தைப் பார்த்ததும், காரில் இருந்து இரண்டு பெட்டிகளைத் தூக்கிக்கொண்டு ஓட முயற்சித்தார்.

டிரைவரை மடக்கி, அவர் கையில் வைத்திருந்த பெட்டிகளில் சோதனை செய்தபோது, சுயேச்சை எம்.எல்.ஏ-வின் புகைப்படம், அவரது காலணி சின்னத்துடன் 'அம்பாள் கோசாலை வழங்கும் காமதேனு திட்டம்' எனப் பொறிக்கப்பட்டிருந்த டோக்கன்கள் இருந்தன. அந்த டோக்கனின் பின்புறத்தில், முதியோர் உதவித் திட்டம், மகப்பேறு உதவித் திட்டம், திருமண உதவித் திட்டம், கல்வி உதவித் திட்டம், மருத்துவ உதவித் திட்டம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒவ்வொரு டோக்கனிலும் பார்கோடு எண்களும் பொறிக்கப்பட்டிருந்தன. அந்த பார்கோடுகளைச் சோதனை செய்து பார்த்ததில், சென்னையில் உள்ள தனியார் மருந்துக் கம்பெனியின் என்பது தெரிய வந்துள்ளது.

வாக்காளர்களுக்குப் பணம் வழங்குவதற்காக டோக்கன் வழங்கப்பட்டதாகப் பறக்கும்படையின் புகாரின்படி, தேர்தல் விதிமுறைகளை மீறுதல், மக்களை மோசடியாக ஏமாற்றுதல் மற்றும் வாக்காளர்களிடம் போலியான வாக்குறுதிகள் கொடுத்து  வாக்குகளைப் பெற முயற்சித்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் சுயேச்சை வேட்பாளர் மார்கண்டேயன் மற்றும் தப்பமுயன்ற கார் டிரைவர் உள்ளிட்ட இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    

    

நீங்க எப்படி பீல் பண்றீங்க