"தமிழும் மலையாளமும் எந்த விதத்தில் குறைந்துவிட்டன?" - மோடியை விளாசிய ராகுல் காந்தி | Rahul Gandhi slams Modi in Wayanad

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (17/04/2019)

கடைசி தொடர்பு:21:40 (17/04/2019)

"தமிழும் மலையாளமும் எந்த விதத்தில் குறைந்துவிட்டன?" - மோடியை விளாசிய ராகுல் காந்தி

"தமிழும் மலையாளமும் மற்ற மொழிகளைவிட எந்த விதத்தில் குறைந்துவிட்டன?" என்று ராகுல் காந்தி வயநாட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடியைத் தாக்கிப் பேசினார்.

"தமிழும் மலையாளமும் மற்ற மொழிகளைவிட எந்த விதத்தில் குறைந்துவிட்டன?" என்று ராகுல் காந்தி, வயநாட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடியைத் தாக்கிப் பேசினார்.

ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநிலம் வயநாட்டிலும் போட்டியிடுகிறார். இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக கேரளா வந்துள்ள ராகுல், வயநாட்டில் பல்வேறு இடங்களுக்குச் சென்று பிரசாரம் செய்தார். குறிப்பாக, ராஜீவ் காந்தியின் அஸ்தியைக் கரைத்த, திருநெல்லி கிராமம் பாபநாசினி ஆற்றுக்குச் சென்றார். திருநெல்லி விஷ்ணு கோயிலுக்குச் சென்ற ராகுல், பிறகு பாபநாசினி ஆற்றுக்குச் சென்று தனது தந்தை ராஜீவ் காந்திக்கு தர்ப்பணம் விட்டார்.

இதையடுத்து, ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற முதல் கேரளப் பழங்குடி ஶ்ரீதன்யாவைச் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, சுல்தான் பத்தேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ''கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடியின் சிந்தனைகளுக்கு எதிராகப் போராடிவருகிறோம். கடந்த ஐந்து ஆண்டுகளாக, இந்தியாவின் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்திருக்கிறேன். அங்கு, பல்வேறு கலாசாரங்கள் இருக்கின்றன. குறிப்பாக, நான் கேரளா, தமிழகம் செல்லும் போதெல்லாம், 'எதற்காக ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடி தங்களது பார்வைகளை எங்கள்மீது திணிக்கிறார்கள் என்ற குரலைக் கேட்கமுடிகிறது.

ராகுல் காந்தி

தமிழையும் மலையாளத்தையும் மட்டும் எதற்காகத் தனித்துப் பார்க்க வேண்டும்? இந்த இரண்டு மொழிகளும் மற்ற மொழிகளைவிட எந்த விதத்திலும் குறைந்தது கிடையாது. மற்ற மாநிலங்களின் வரலாறுகளைப் போல, இந்த மாநிலங்களுக்கான வரலாறும் மிகவும் முக்கியமானது. தவிர, மோடி சொல்லும் நமக்கு வரலாறு முக்கியமில்லை என்பதற்கு, 'மற்ற மாநிலங்களைப் போல தென் இந்தியாவும் முக்கியமானது' என்ற செய்தியை நான் மோடிக்கும், ஆர்.எஸ்.எஸ்-க்கும் சொல்ல விரும்புகிறேன்.

குறிப்பாக, தென் இந்தியாவின் குரலாக இருக்க நான் விரும்புகிறேன். அதற்காகத்தான், அமேதியைப் போல வயநாட்டிலும் போட்டியிடுகிறேன். தென் இந்தியாவில் போட்டியிடுவது என்ற முடிவெடுத்த உடனேயே, நான் தேர்ந்தெடுத்தது வயநாட்டைத்தான். இங்கு, பல்வேறு தரப்பு மக்களும் கலாசாரங்களும் இருக்கின்றன. அப்படி இருந்தும், அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கின்றனர். மற்ற பகுதிகளும், வயநாட்டிடம் இருந்து இதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

ராகுல் காந்மி

நான் மோடியைப் போல, ரூ.15 லட்சம் வங்கிக் கணக்கில் செலுத்துவேன். 2 கோடி வேலை வாய்ப்புகளைத் தருவேன் என்றெல்லாம் பொய் சொல்ல இங்கு வரவில்லை. மன் கி பாத் என்று மோடியைப் போல் மனதில் பட்டதை மட்டும் சொல்வதற்காகவும் நான் வரவில்லை. அதேபோல, தேர்தலுக்காக ஒரு இரண்டு மாதம் மட்டும் உங்களுடன் இருந்து செல்வதற்கும் நான் வரவில்லை. ஆயுள் முழுக்க உங்களுடனான உறவை நீட்டிக்க விரும்புகிறேன். வயநாடு மக்கள் தங்களது சொந்த மகன், சகோதரன், நண்பனைப் போலத்தான் என்னைப் பார்க்க வேண்டும்.

உங்களுடைய பிரச்னைகளையும் உணர்வுகளையும் உணர்ந்துகொள்ள வந்திருக்கிறேன். பழங்குடிகள் பிரச்னை, மனித-விலங்கு மோதல் பிரச்னை, இரவு நேரப் பயணத் தடை, மருத்துவ வசதி என்று உங்களின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண வந்திருக்கிறேன்'' என்றார்.