பாதுகாப்பு வாகனங்கள் சூழ வந்த இரண்டு மினி லாரிகள்! - திருவள்ளூர் அருகே 1,381 கிலோ தங்கம் பறிமுதல் | 1381 kg gold seized near thiruvallur

வெளியிடப்பட்ட நேரம்: 20:48 (17/04/2019)

கடைசி தொடர்பு:20:48 (17/04/2019)

பாதுகாப்பு வாகனங்கள் சூழ வந்த இரண்டு மினி லாரிகள்! - திருவள்ளூர் அருகே 1,381 கிலோ தங்கம் பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு அருகே, இரண்டு மினி லாரிகளில் இருந்து 1,381 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தங்கம்

நாளை, தமிழகம் முழுவதும் மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனால், பணப்பட்டுவாடாவை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையத்தின் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். காலை முதல் பல இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுவருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு அருகே இரண்டு பாதுகாப்பு வாகனங்கள் முன்னும் பின்னும் சூழ, இரண்டு மினி லாரிகள் வந்துகொண்டிருந்தன. அப்போது, வெள்ளவேடு என்ற கிராமம் அருகே நின்றுகொண்டிருந்த பறக்கும்படை அதிகாரிகள், அந்த லாரிகளை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில், லாரிகளில் 1381 கிலோ தங்கம் இருந்தது. விசாரணையில், திருப்பதி தேவஸ்தானத்துக்குக் கொண்டுசெல்வதற்காக சுவிட்சர்லாந்தில் இருந்து பஞ்சாப் நேஷனல் வங்கிமூலம் கொண்டுவரப்பட்டது எனத் தெரியவந்தது. 

தங்கம்

இருப்பினும், அவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லாததாலும், வண்டியில் இருந்த ஊழியர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் அதிகாரிகளுக்கு சரியாக பதிலளிக்கவில்லை என்பதாலும், 1381 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு, தங்கம் யாருடையது என்பதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்திக்கொண்டனர். இருப்பினும், முறையான ஆவணங்கள் இருந்தால்தான் ஒப்படைக்க முடியும் எனக் கூறி பறிமுதல்செய்த தங்கக்கட்டிகளை பூந்தமல்லி தாலுகா ஆபீஸில் உள்ள தேர்தல் அதிகாரிகளிடத்தில் ஒப்படைத்தனர். 

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்

இதற்கிடையே, 'பூந்தமல்லி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதால், ஆளுங்கட்சி பணம் விநியோகம் செய்ய ஏதுவாக இந்த மாதிரி சோதனைகளை நடத்தி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது தேர்தல் ஆணையம்' என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.