தேனி தொகுதியில் தேர்தலை நிறுத்த அவசர முயற்சி? | EC to review the situation in Theni constituency after andipatti money capture

வெளியிடப்பட்ட நேரம்: 21:46 (17/04/2019)

கடைசி தொடர்பு:07:55 (18/04/2019)

தேனி தொகுதியில் தேர்தலை நிறுத்த அவசர முயற்சி?

தேனி தொகுதியில் தேர்தலை நிறுத்த முயற்சிகள் நடப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தேர்தல் ஆணையம்

ஆண்டிபட்டி அ.ம.மு.க அலுவலகத்திலிருந்து ரூ.1.48 கோடி பணத்தை அதிகாரிகள் நேற்று இரவு கைப்பற்றினர். பணத்தைக் கைப்பற்றச் சென்ற மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி உள்ளிட்ட அதிகாரிகளுடன் அ.ம.மு.க நிர்வாகிகள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதையடுத்து அவர்களை எச்சரிக்க போலீஸார் வானத்தை நோக்கி 4 முறை துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. வேலூர் தொகுதியில் பணம் கைப்பற்றப்பட்டதை அடுத்து, அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. 

இந்தநிலையில், தேனி தொகுதி நிலவரம் குறித்து தேர்தல் ஆணையம் தீவிரமாக விசாரித்து வருகிறது. தேனி தொகுதியில், அ.தி.மு.க வேட்பாளராகக் களமிறங்கியுள்ள ரவீந்திரநாத்தின் வெற்றிக்கு வாய்ப்புகள் குறைவே என்ற ஒரு தகவல் ஓ.பன்னீர்செல்வத்துக்குச் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்தத் தொகுதியில் தேர்தலை தள்ளிவைக்க, மத்திய அரசுக்கு நெருக்கமான சிலர் மூலம் ஓ.பி.எஸ் தீவிரமாக முயற்சி செய்துவருகிறார் என்கிறார்கள்.  

ஆண்டிபட்டி அ.ம.மு.க அலுவலகம்

ஆண்டிபட்டியில் பணம் கைப்பற்றப்பட்டது மற்றும் தேனி தொகுதி நிலவரம் குறித்து மதியம் 3 மணிக்கு தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திலிருந்து மத்தியத் தேர்தல் ஆணையத்துக்கு ஒரு கடிதம் சென்றிருக்கிறது. அதில், தேனி மக்களவைத் தொகுதியில் தேர்தலை நிறுத்த சாத்தியக் கூறுகள் இருப்பதாக ஆணையம் தெரிவித்திருக்கிறது என்கிறார்கள். இதையடுத்து, 4 மணிக்கு மேல் அந்தக் கடிதத்தை மத்திய சட்டத்துறை அமைச்சகத்துக்குத் தேர்தல் ஆணையம் அனுப்பியிருப்பதாகவும், அதுகுறித்து இன்று இரவுக்குள்ளே முடிவெடுக்கவும் அறிவுறுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து டெல்லியில் தீவிர ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. 

இறுதிக்கட்ட பரப்புரையில் ஓ.பி.எஸ்

குடியரசுத் தலைவர் ஒப்புதல் இருந்தால் மட்டுமே தேர்தலை நிறுத்த முடியும் என்ற நிலையில், அதுகுறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டுள்ள நிலையில், கடைசி நேரத்தில் தேனி தொகுதி தேர்தல் நிறுத்தப்பட்டால், அது அ.தி.மு.கவுக்கு எதிரான மனநிலையை மக்கள் மனதில் ஏற்படுத்திவிடும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி நினைப்பதாக அ.தி.மு.கவினர் சொல்கிறார்கள். அதேநேரம், மகன் தோல்வியை விரும்பாத ஓ.பி.எஸ், தேர்தலை ஒத்திவைக்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருகிறார் என்கிறார்.