`வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற அ.தி.மு.க-வினர் திட்டமிட்டுள்ளனர்!' - தி.மு.க தேனி மாவட்டப் பொறுப்பாளர் குற்றச்சாட்டு | AIADMK is planning to seize polling booths in theni alleges DMK

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (17/04/2019)

கடைசி தொடர்பு:07:53 (18/04/2019)

`வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற அ.தி.மு.க-வினர் திட்டமிட்டுள்ளனர்!' - தி.மு.க தேனி மாவட்டப் பொறுப்பாளர் குற்றச்சாட்டு

ஒரு பக்கம் அதிகம் பணம் பட்டுவாடா செய்யப்படும் தொகுதி என்ற பெயர், மறு பக்கம், பட்டுவாடா செய்யப்பட இருந்த பணம் பறிமுதல் செய்ய நடந்த துப்பாக்கிச்சூடு என தேனி மாவட்டத் தேர்தல் களம் பரபரப்போடு காட்சியளிக்கிறது. இந்நிலையில், தி.மு.க கூட்டணிக் கட்சியினர் தேனியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

தேனி மாவட்ட தி.மு.கவினர் செய்தியாளர் சந்திப்பு

அப்போது பேசிய தி.மு.க தேனி மாவட்டப் பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன், ``ஓ.பி.எஸ் தனது அதிகார, பண, ஆள்பலத்தைப் பயன்படுத்தி, தேர்தல் விதிமுறைக்கு மாறாக வாக்காளர்களுக்கு சேலைகள், பரிசுப் பொருள்கள், ஆயிரம் மற்றும் இரண்டாயிரம் ரூபாய் எனth தாராளமாகப் பணம் வழங்குகிறார். தேர்தல் ஆணையம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஓ.பி.எஸ் மகன் ஜெயிக்கமாட்டார் எனத் தெரிந்து, வாக்குப்பதிவின் போது மாலை 3 மணிக்கு மேல், 500 குண்டர்களை வைத்து வாக்குச்சாவடிகளை முற்றுகையிட்டு, முகவர்கள், அதிகாரிகளை மிரட்டி அவர்கள் இஷ்டத்துக்கு ஓட்டுபோட திட்டமிட்டுள்ளனர். இந்தத் தகவல் நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து எனக்குக் கிடைத்துள்ளது.

தேனி மாவட்ட தி.மு.கவினர் செய்தியாளர் சந்திப்பு

தேனியில் பகிரங்கமாகப் பணம் கொடுக்கிறார்கள். 300 கோடி ரூபாய் அளவுக்கு பணப்புழக்கம் தேனியில் நடந்திருக்கிறது. தேர்தல் ஆணையம் அமைதி காக்கிறது. இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும், மாவட்ட தேர்தல் அலுவலரிடமும் புகார் தெரிக்க இருக்கிறோம். அதிக போலீஸ் பாதுகாப்புடன், தேர்தல் நேர்மையாக நடத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை" என்றார்.