`1,025 வாக்காளர்கள்' - சீர்காழி அருகே தீவு கிராமத்துக்குச் சென்ற தேர்தல் அலுவலர்கள்! | election Election Commissioner arrival near island village for polling

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (17/04/2019)

கடைசி தொடர்பு:23:30 (17/04/2019)

`1,025 வாக்காளர்கள்' - சீர்காழி அருகே தீவு கிராமத்துக்குச் சென்ற தேர்தல் அலுவலர்கள்!

election

சீர்காழி அருகே கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வாக்குப்பெட்டியுடன் தேர்தல் அலுவலர்கள் இன்று புறப்பட்டுச் சென்றனர்.

தேர்தல் அலுவலர்கள்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே கொடியம்பாளையம் தீவு கிராமம் அமைந்துள்ளது. இங்கு 475 குடும்பங்களைச் சேர்ந்த 1025 வாக்காளர்கள் உள்ளனர். இது தீவு கிராமமாக உள்ளதால், இங்கு தேர்தல் நடத்த பழையாறு மீன்பிடித்  துறைமுகத்திலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப் பெட்டிகள் கொள்ளிடம் ஆற்றின் வழியே படகில் எடுத்துச் செல்லப்படுவது வழக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து இளந்திரைமேடு கிராமம் வழியாக கொடியம்பாளையம் கிராமம் செல்வதற்கு ஆற்றின் குறுக்கே நீண்டபாலம் கட்டப்பட்டுள்ளதால் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது வாக்குப்பெட்டி தரை வழியாக கொள்ளிடத்திலிருந்து 30 கி.மீ.தூரத்திலுள்ள கொடியம்பாளையம் கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 

தற்பொழுது இரண்டாவது முறையாக இன்று மண்டல அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் துணை மண்டல அலுவலர் கஜேந்திரன் மற்றும் 4 வாக்குப்பதிவு அலுவலர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரகுராமன் மற்றும் போலீஸார் பாதுகாப்புடன் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கான பொருள்களுடன் ஒரு வேனில் கொடியம்பாளையம் கிராமத்திலுள்ள வாக்குச் சாவடியைச்  சென்றடைந்தனர். இங்கு தேர்தல் நடத்தி முடித்து வருவது சவாலான காரியம் என அதிகாரிகள் கூறி வருகின்றனர்.