`இதுகூட செய்யாத அரசுக்கு ஓட்டு போடமாட்டோம்!’ - கோயம்பேட்டில் கொந்தளித்த பொதுமக்கள் | Road roco in koyambedu for bus demand

வெளியிடப்பட்ட நேரம்: 02:08 (18/04/2019)

கடைசி தொடர்பு:10:25 (18/04/2019)

`இதுகூட செய்யாத அரசுக்கு ஓட்டு போடமாட்டோம்!’ - கோயம்பேட்டில் கொந்தளித்த பொதுமக்கள்

தேர்தலையொட்டி தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்கள் மீது தடியடி நடத்தினர்.

பொதுமக்கள்

தமிழகத்தில் நாளை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஒரேகட்டமாக நாளை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலையொட்டி தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்குப்பதிவு செய்ய பொதுமக்கள் ஆயத்தமாயினர். அதன்படி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோயம்பேட்டில் குவிந்தனர். மாலை 6 மணி முதல் கோயம்பேட்டில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கத்தொடங்கியது. போதுமான பேருந்துகள் இல்லாததால், பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லமுடியாமல் அவதியடைந்தனர். நீண்ட காத்திருப்புக்குப்பின் ஆத்திரமடைந்த அவர்கள் இரவு 12 மணி அளவில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மக்கள்

இதையறிந்த அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்தையில் ஈடுபட்டனர். அப்போது, ``பேருந்துகள் போதுமான அளவில் இல்லை; எங்களுக்குப் போதிய பேருந்துகளை ஏற்பாடு செய்யும்வரை நாங்கள் களையமாட்டோம்’ என உறுதியாகக் கூறினர். இதையடுத்து, அவர்களைக் களைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனிடையே பேருந்துகளும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வராமல் ஸ்தம்பித்துவிட்டன. நள்ளிரவு என்பதால் பொதுமக்கள் ஊர்களுக்குச் செல்லமுடியாமலும், திரும்பிப் போகமுடியாமலும் தவித்தனர்.

கோயம்பேடு

ஆத்திரமடைந்த அவர்கள், `வாக்குப்பதிவு செய்ய போதிய பேருந்துகளைக்கூட இயக்காத அரசுக்கு எங்கள் ஓட்டு இல்லை; இதைக்கூட அவர்களால் சரிவர செய்துதர முடியவில்லையா?’ என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து கூச்சல் போட்டவாரே மறியலில் ஈடுபட்டனர். `சமூக கடமை ஆற்றக்கூட அரசு உதவவில்லை; இவர்களை நம்பி எப்படிவாக்களிப்பது” என இளைஞர்கள் கொந்தளித்தனர். இதனால் பெருமளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நாளை வாக்களிக்க முடியாது எனவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

மக்கள்

தொடர்ந்து சில பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன. பேருந்து பற்றாக்குறை காரணமாக, மாநகரப் பேருந்துகள், வெளியூர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க