`ஓட்டு கேட்டுகூட வரமாட்டாங்க; நாங்க ஏன் வாக்களிக்கணும்?’ - தேர்தலைப் புறக்கணித்த மலைக்கிராம மக்கள் | kurangani village people Boycotts lok sabha election

வெளியிடப்பட்ட நேரம்: 10:05 (18/04/2019)

கடைசி தொடர்பு:07:27 (19/04/2019)

`ஓட்டு கேட்டுகூட வரமாட்டாங்க; நாங்க ஏன் வாக்களிக்கணும்?’ - தேர்தலைப் புறக்கணித்த மலைக்கிராம மக்கள்

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மலைக் கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குரங்கணி

போடி அருகே உள்ள குரங்கணி மலைக் கிராமத்திலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் மலைப்பாதைக்குப் பிறகு அமைந்துள்ளது சென்ட்ரல் ஸ்டேஷன் என்ற மலைக் கிராமம். அங்குள்ள மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி தாங்கள் தவிப்பதாகக் கூறி தேர்தலைப் புறக்கணித்திருப்பதாக சென்ட்ரல் ஸ்டேஷன் மலைக் கிராம மக்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக சென்ட்ரல் ஸ்டேஷனைச் சேர்ந்த நபரிடம் பேசியபோது, ``எங்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் இதுவரை செய்துகொடுக்கப்படவில்லை. பல முறை அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் சந்தித்துப் பேசியும் எந்தப் பலனும் இல்லை. ஓட்டு கேட்டு இதுவரை எங்கள் கிராமத்துக்கு எந்த அரசியல்வாதியும் வந்ததில்லை. இந்நிலையில், நேற்று ஓட்டுப் பதிவு இயந்திரத்தோடு எங்கள் கிராமத்துக்கு அதிகாரிகள் வந்தார்கள். அரசு ஆரம்பப் பள்ளியில் தங்கினர். இன்று காலை ஓட்டு போட வேண்டும் என்றார்கள்.

குரங்கணி மலைகிராம மக்கள்

நாங்கள் எதற்கு ஓட்டு போட வேண்டும்? எந்தவித அடிப்படை வசதிகளும் எங்களுக்கு இதுவரை செய்துகொடுக்கப்படவில்லை. சாலை வசதி இல்லை. நாங்கள் இந்த நாட்டின் குடிமக்களா என்பதே எங்களுக்குச் சந்தேகமாக இருக்கிறது. எங்கள் கிராமத்தில் நாங்கள் யாரும் ஓட்டு போட மாட்டோம். அப்போதாவது எங்கள் கஷ்டம். எங்கள் நிலைமை வெளி உலகத்துக்குத் தெரியட்டும்" என்றார் ஆதங்கத்தோடு. சென்ட்ரல் ஸ்டேஷனில் மொத்தம் 169 வாக்குகள் இருப்பதாகவும், தொடர்ந்து அம்மக்களை ஓட்டு போட அழைத்தும் மக்கள் வரவில்லை என்றும் தெரிவிக்கும் அதிகாரிகள். குதிரை மூலமாக மலைப்பாதையில் ஓட்டு இயந்திரத்தை எடுத்து வந்து, இரவில் மலைப்பகுதியில் தங்கியும் மக்கள் ஓட்டளிக்க வரமறுப்பது குறித்து வருத்தம் தெரிவித்தனர். எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் நாங்கள் இப்படித்தான் தினம் தினம் கஷ்டப்படுகிறோம் என்கிறார்கள் மலைக் கிராமவாசிகள்.