`காங்கிரஸ் 90%; என்.ஆர்.காங்கிரஸ் 70%; ம.நீ.ம 30%!'- இது புதுச்சேரி கலாட்டா | Puducherry money distribution

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (18/04/2019)

கடைசி தொடர்பு:16:00 (18/04/2019)

`காங்கிரஸ் 90%; என்.ஆர்.காங்கிரஸ் 70%; ம.நீ.ம 30%!'- இது புதுச்சேரி கலாட்டா

மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் மற்றும் என்.ஆர்.காங்கிரஸுடன் இணைந்து மக்கள் நீதி மய்யமும் புதுச்சேரி வாக்காளர்களை பண மழையில் நனைத்திருக்கிறது.

காங்கிரஸ் நாராயணசாமி பிரசாரம்

இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் கடந்த 11-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழகம் – புதுச்சேரி உள்ளிட்ட 39 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதனுடன் தமிழகத்தின் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களும், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்குமான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு படைகளை வைத்து அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுப்பதாகக் கூறும் இந்தியத் தேர்தல் ஆணையம், அதுகுறித்த விழிப்புணர்வு விளம்பரங்களுக்காக மக்களின் வரிப்பணத்தைக் கோடிக்கணக்கில் செலவு செய்தும் வருகிறது. ஆனால், அதெல்லாம் வெறும் கண் துடைப்புக்காகத்தான் என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகின்றது. திருமங்கலம் தொகுதி ஃபார்முலாவை முறியடித்தது புதுச்சேரியின் நெல்லித்தோப்புத் தொகுதிதான்.

ரங்கசாமி பிரசாரம்

தேர்தலைச் சந்திக்காமல் நாராயணசாமி முதல்வரானதால் நெல்லித்தோப்புத் தொகுதி இடைத்தேர்தலைச் சந்தித்தது. அந்தத் தொகுதியில் வெற்றிபெற்று, நாராயணசாமிக்காக தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த ஜான்குமார் தனது பலத்தை நிரூபிக்க வாக்கு ஒன்றுக்கு சுமார் 10,000 ரூபாய் வரை செலவு செய்தார். கேஸ் ஸ்டவ், குக்கர், ஃபேன் போன்றவையும் அதில் அடக்கம். ஒவ்வொரு குடும்பத்துக்கும் அடையாள அட்டை கொடுத்து வருடம் முழுவதும் அரிசி, சர்க்கரை, புடவை, பேன்ட் சர்ட் போன்றவற்றை அவர் கொடுத்து வருவது தனிக்கதை.

அதேபோல அப்போது நாராயணசாமியை எதிர்த்து என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிட்ட ஓம் சக்தி சேகர் தன் பங்குக்கு வாக்கு ஒன்றுக்கு சுமார் 3,000 ரூபாய் வரை செலவழித்துத் தோற்றார். இந்தப் பணப் பட்டுவாடாக்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் கண்ணெதிரில்தான் நடைபெற்றது என்பதை ஆதாரங்களுடன் அப்போது நமது ஜு.வி இதழில் வெளியிட்டிருந்தோம்.

அதேபோல இந்தத் தேர்தலிலும் தங்களது பணப் பட்டுவாடாக்களை கச்சிதமாக வாக்காளர்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கின்றன புதுச்சேரி அரசியல் கட்சிகள். மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியுடன் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி, நகரப் பகுதியைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு 300 ரூபாய், கிராமப்புற வாக்காளர்களுக்கு 200 ரூபாய் எனக் கணக்கிட்டு 90% வழங்கியிருக்கிறது. குறிப்பாக முதல்வர் நாராயணசாமி தொகுதியில் டோக்கன்கள் கொடுத்து 2 சுற்றாக 500 ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.

புதுச்சேரியில் கமல்ஹாசன்

அதேசமயம் என்.ஆர் காங்கிரஸ் கட்சி 200, 300 ரூபாய் என நேற்று இரவு வரை 70% மட்டுமே வழங்கி முடித்திருக்கிறது. மேலும், மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கும் தட்டாஞ்சாவடித் தொகுதிக்கு மட்டும் காங்கிரஸ் – என்.ஆர்.காங்கிரஸ் இரண்டு தரப்பும் வாக்கு ஒன்றுக்கு 1,500 ரூபாய் எனக் கணக்கிட்டு 90% வழங்கியிருக்கின்றன. அதேபோல ``வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதில்லை” என்ற முழக்கத்துடன் களம் இறங்கியுள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், புதுச்சேரி வாக்காளர்களுக்கு 200 ரூபாய் கொடுத்திருப்பதுதான் இதில் ஹைலைட். இவர்கள் 30% வழங்கியிருப்பதாக கூறுகின்றனர்.

ஆளும் கட்சிகளின் கைப்பாவையாக இல்லாமல் இந்தியத் தேர்தல் ஆணையம் என்று சுதந்திரமாகச் செயல்படுகிறதோ அன்றுதான் பண நாயகத்தை வீழ்த்தி ஜனநாயகம் வெற்றிபெறும். ஆனால், அதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறதா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்விகள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க