`விமர்சிக்க மாட்டேன்; இன்னும் கடுமையாக்கணும்!'- யாரைச் சொல்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன் | ponnar talks after polling his vote

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (18/04/2019)

கடைசி தொடர்பு:07:31 (19/04/2019)

`விமர்சிக்க மாட்டேன்; இன்னும் கடுமையாக்கணும்!'- யாரைச் சொல்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்

``தேர்தல் ஆணையத்தின் பணி ஓரளவு திருப்தியாக உள்ளது. தேர்தல் ஆணையத்தை விமர்சனம் செய்ய விரும்பவில்லை. இன்னும் கடுமையாக இருந்திருக்க வேண்டும்'' என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

வாக்களிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன்


நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியில் வாக்களித்த கன்னியாகுமரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``இந்திய திருநாட்டின் தலை எழுத்தை நிர்ணயிக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் நடக்கிறது. கன்னியாகுமரி தொகுதியில் பா.ஜ.க. அமோக வெற்றிபெறும். மாவட்டத்தின் வளர்ச்சியின் முக்கியத்துவம் கருதி புதிய வாக்காளர்கள் ஆதரவு எனக்கு உள்ளது. இரண்டு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன்.

கையில் மை வைக்கும் பொன் ராதாகிருஷ்ணன்

வாக்களிப்பதில் மக்கள் மவுனப் புரட்சி செய்கிறார்கள். தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளின் சோதனை பொதுவானதுதான். என்னையும் சோதனை செய்தார்கள். அமைச்சர்கள் வீடுகளிலும் சோதனை செய்துள்ளனர். பிரதமர் பயணம் செய்த ஹெலிகாப்டரை சோதனை செய்த அதிகாரி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளது குறித்து கேட்கிறீர்கள். பிரதமர் ஹெலிகாப்டர் சோதனை விஷயத்தில் பல விதிமுறைகள் உள்ளன.

மை வைக்கப்பட்ட விரலை காட்டும் பொன்.ராதாகிருஷ்ணன்

இந்தமுறை தேர்தல் பணியாளர்களின் தவறு காரணமாக பூத் சிலிப் வழங்குவதில் குளறுபடி உள்ளது. பூத் சிலிப் இல்லாமல் ஏதாவது ஒரு அடையாள அட்டை வைத்திருந்தாலும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பணி ஓரளவு திருப்தியாக உள்ளது. தேர்தல் ஆணையத்தை விமர்சனம் செய்ய விரும்பவில்லை. இன்னும் கடுமையாக இருந்திருக்க வேண்டும்" என்றார்.