`நாங்கள் முதல் இடம் பிடித்தால், யார் 2, 3-வது இடம் வருவார்கள்!'- வாக்களித்த ராமதாஸ் கேள்வி | anbumani ramadoss talks about lok sabha election

வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (18/04/2019)

கடைசி தொடர்பு:07:39 (19/04/2019)

`நாங்கள் முதல் இடம் பிடித்தால், யார் 2, 3-வது இடம் வருவார்கள்!'- வாக்களித்த ராமதாஸ் கேள்வி

திண்டிவனத்தில் உள்ள மரகதாம்பிகை உயர்நிலைப் பள்ளியில் வாக்களிப்பதற்காக தன் துணைவியாருடன் வந்திருந்த பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி வாக்களித்த பின் பத்திரிகையாளர்களிடம் பேசத் தொடங்கினார். ``மிகவும் வலிமையான இந்தியா, வளமான தமிழகம் காண எங்கள் அணி மிகப் பெரிய வெற்றி பெற இருக்கிறது. தமிழகம், புதுவையில் உள்ள 39 நாடாளுமன்றம் மற்றும் 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் எங்களுக்கு வெற்றி கொடுக்க மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். வருகின்ற செய்திகள் எல்லாம் மக்கள் எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவு வாக்கு கொடுத்து வருகிறார்கள் என்பதுதான். இதுவரை தமிழகம் பார்க்காத வெற்றி எங்களுக்கு மக்கள் கொடுக்க இருக்கிறார்கள். இந்தத் தேர்தல் `விவசாயிகளுக்கும், முதலாளிகளுக்கும் நடக்கின்ற ஒரு தேர்தல்', ஒரு போட்டி. எங்கள் அணியில் உள்ளவர்கள் விவசாயிகள், பாட்டாளித் தொழிலாளர்கள். எதிரணியில் உள்ளவர்கள், பண முதலாளிகள், பணமுதலைகள், மது ஆலை உரிமையாளர்கள். 

அன்புமணி

ஆகவே, தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், மாணவர்கள், மீனவர்கள், அரசு ஊழியர்கள் போன்ற அனைவரும் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். எங்களுக்கு நிச்சயமாக மிகப்பெரிய வெற்றியைத் தருவார்கள். தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பார்த்தோம். அதாவது, மிகப் பெரிய அளவில் விசாரணை நடத்தி பல வகை விசாரணை நடத்தி ஒரு `ஸ்பீக்கிங் ஆர்டரை' தேர்தல் ஆணையம் கொடுத்திருக்கிறது. வேலூர் நாடாளுமன்றத்தில் தேர்தலை ரத்து செய்திருக்கிறோம் என்று. அதில் மிகத் தெளிவாக, அங்கே போட்டியிடுகின்ற எதிர்க்கட்சி சார்ந்த வேட்பாளர் அவர் பெயரை குறிப்பிட்டு, அவர் கட்சியை குறிப்பிட்டு, அவரைச் சார்ந்தவர்கள் எல்லாரையும் குறிப்பிட்டு, எதற்காக இதைச் செய்தார்கள் என்றும், எவ்வளவு பணம் பிடித்தார்கள் என்றும் மிகத் தெளிவாக பெரிய விசாரணை நடத்தி அதில் குறிப்பிட்டிருந்தார்கள்.

ராமதாஸ்

எங்களைப் பொறுத்தவரை அந்தப் பணம் கொடுக்கத் திட்டமிட்டு அந்த நபரை மட்டும் நீக்கித் தேர்தல் நடத்தி இருக்கலாம். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால்... எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் பணத்தைக் கொடுத்து வாக்குகளை வாங்க மிகப் பெரிய சதித் திட்டம் செய்திருக்கிறார்கள். செய்துகொண்டிருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் சோதனை என்பது தேர்தல் ஆணையத்துக்குத் தகவல் யாராவது கூறினால் அவர்கள் சோதனை செய்துகொண்டிருக்கிறார்கள். அதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எதுவும் கிடையாது. இங்கு பணம் இருக்கிறது எனச் செய்தி வந்தால் உடனடியாக வருமானவரித் துறை மற்றும் தேர்தல் ஆணையம் இரண்டும் இணைந்து சோதனை நடத்துகிறார்கள். எனக்கு ஒரே ஒரு கேள்வி! இவ்வளவு பெரிய தேர்தல் ஆணையம் ஸ்பீக்கிங் ஆர்டர் கொடுக்கும்போது ஏன் சில ஊடகங்கள் வரவில்லை. சில ஊடகம் வந்தது. சில நபரைக் குறிப்பிட்டு, கட்சியைக் குறிப்பிட்டு இதற்கு மேல ஒரு ஸ்பீக்கிங் ஆர்டரை போட முடியாது. புதுவை உட்பட தற்போது நடைபெறும் 39 தொகுதியிலும் மிகப் பெரிய சாதனை வெற்றி பெறுவோம். நான் இப்போது ஓட்டு போடும்போது பார்த்தேன். எங்கள் சின்னம் ஒரு 8 செகண்டு நன்றாகவே தெரிஞ்சது. நல்லமுறையில் தான் இயந்திரம் செயல்படுகிறது. ஆனாலும் உலகளவிலே பல இடங்களில் வாக்குச்சீட்டு முறையைத்தான் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். இன்னும் கொஞ்சம் சீர்திருத்தம் செய்யலாம் தேர்தல் ஆணையம்" என கூறினார்.

ராமதாஸ்

அவரைத் தொடர்ந்து பின்னர் 10.45 மணி அளவில் வாக்களிக்க தன் மனைவியுடன் அதே பள்ளிக்கு வந்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசினார். ``தமிழ்நாடு மற்றும் புதுவையைச் சேர்ந்த 39 நாடாளுமன்றத் தொகுதி மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி பெரும். வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை, கடமை மட்டுமல்ல உரிமையும்கூட. அந்தவகையிலே 95 சதவிகிதம் மற்றும் அதற்கு மேலாக வாக்குகள் பதிவாக வேண்டும். எனவே, ஒவ்வொரு குடிமகனும் வாக்களிப்பது அவர்களுடைய கடமை. அதனால், அவர்கள் அனைவரும் வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு மற்றும் புதுவையைச் சேர்த்து 39 தொகுதிகளிலும், 22 சட்டமன்றத் தொகுதியிலும் மிகப்பெரிய வெற்றியை அ.தி.மு.க தலைமையில் பெறப் போகிறோம். நாங்கள் முதல் இடம் பிடித்தால் யார் இரண்டாவது இடம் மூன்றாவது இடம் வருவார்கள் என்பது இல்லை" என்றார்.