`மை வைத்துவிட்டனர்; ஓட்டு போட முடியவில்லை!' - அ.ம.மு.க வேட்பாளருக்கு அதிர்ச்சிகொடுத்த அதிகாரிகள் | AMMK candidate was unable to put his vote

வெளியிடப்பட்ட நேரம்: 14:42 (18/04/2019)

கடைசி தொடர்பு:07:40 (19/04/2019)

`மை வைத்துவிட்டனர்; ஓட்டு போட முடியவில்லை!' - அ.ம.மு.க வேட்பாளருக்கு அதிர்ச்சிகொடுத்த அதிகாரிகள்

பூந்தமல்லி இடைத்தேர்தலில், தினகரன் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பரிசுப்பெட்டகம் சின்னத்தில் ஏழுமலை போட்டியிடுகிறார். இவர், இன்று வாக்களிக்கச் சென்றபோது ஓட்டு போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார். 

ஓட்டு போட முடியாமல் திரும்பிய வேட்பாளர் ஏழுமலை

 தமிழகத்தில் இன்று விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்துவருகிறது. 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடப்பதால், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களிப்பது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி சட்டமன்றத்துக்கான இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ-வான ஏழுமலை, பரிசுப் பெட்டகம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர், தன்னுடைய வாக்கைப் பதிவுசெய்ய தண்ணீர்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு காலையில் சென்றார். அப்போது, அங்கு வாக்குப்பதிவு நடந்துகொண்டிருந்தது. 

 வரிசையில் காத்திருந்த வேட்பாளர் ஏழுமலைக்கு முன், வாக்குப்பதிவு செய்ய ஒருவர் சென்றார். அப்போது, வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் அவரால் வாக்குப்பதிவு செய்ய முடியவில்லை. அதற்குள் வேட்பாளர் ஏழுமலையின் பெயர், வாக்காளர் அடையாள அட்டையை சரிசெய்த அலுவலர்கள், அவரின் கையில் மையையும் வைத்தனர். வேட்பாளர் ஏழுமலைக்கு முன்னால் சென்ற நபர், வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தார். 

 ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது

இதனால் மை வைத்த பிறகும் வேட்பாளர் ஏழுமலையால் வாக்குப்பதிவு செய்ய முடியவில்லை. இதையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரம் பழுது குறித்த தகவல் அதிகாரிகளுக்கு ஊழியர்கள் தெரியப்படுத்தினர். உடனடியாக இயந்திரத்தை சரிசெய்ய முயற்சிகள் நடந்தன. ஒரு மணி நேரத்துக்கு மேல் காத்திருந்த வேட்பாளர்,  வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் வெளியில் வந்தார். அப்போது அவர், வாக்குப்பதிவு இயந்திரம் சரியானதும் நான் வாக்களிக்க வருவேன் என்று கூறிவிட்டுச் சென்றார். வேட்பாளர் ஏழுமலை வாக்களிக்க முடியாமல் திரும்பிய தகவல், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் சலசலப்பும் ஏற்பட்டது. 

 இதுகுறித்து வேட்பாளர் ஏழுமலையிடம் பேசினோம், ``திருவள்ளூர் வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலுக்கு காலையில் 7மணியளவில் வந்து சாமி கும்பிட்டேன். ஆதரவாளர்களுடன் வாக்குப்பதிவு மையத்துக்குச் சென்றேன். எனக்கு முன்னால் சென்ற நபர் வாக்குப்பதிவு செய்தபோது இயந்திரம் பழுதானது. அவருக்குப் பிறகு சென்ற நானும் வாக்குப்பதிவு செய்யவில்லை. ஆனால், என்னுடைய கையில் மை வைத்துவிட்டனர். வாக்குப்பதிவு மையத்திலேயே காத்திருக்காமல், தொகுதியைப் பார்வையிடச் சென்றுவிட்டேன். பிற்பகலில் மீண்டும் செல்ல உள்ளேன்’’ என்றார். 

 ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர்களிடம் பேசியபோது, ``தண்ணீர்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பூத் நம்பர் 81, 82, 83 என மூன்று வாக்குப்பதிவு மையங்கள் செயல்படுகின்றன. அதில், இரண்டு வாக்குப்பதிவு மையங்களில் காலையில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. தகவல் கிடைத்ததும் மாற்று இயந்திரம் கொண்டுவந்தோம். ஆனால், அதுவும் சரியாகச் செயல்படவில்லை. பின்னர் இயந்திரம் சரிசெய்யப்பட்டது. சில மணி நேரத்துக்குப் பிறகு வாக்குப்பதிவு தொடங்கியது. வேட்பாளர் ஏழுமலை செல்லும்போது, யதேச்சையாகத்தான் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. அவர் வாக்களிக்க முன் விரவில் மை வைத்தாலும் அவர் மீண்டும் வாக்களிக்கலாம்’’ என்றனர். 

 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளிடம் கேட்டபோது, ``சாமி கும்பிட்டுவிட்டு வேட்பாளர் ஏழுமலை ஓட்டு போட பூத்துக்குச் சென்றார். ஆனால், இயந்திரம் பழுதானதால் அவர் அப்செட்டாகிவிட்டார். உடனடியாக மாற்று இயந்திரம் கொண்டுவரப்பட்டது. அதுவும் பழுது என்று ஊழியர்கள் சொன்னார்கள். எனவே, திட்டமிட்டு சதி நடக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதியில், சில இடங்களில் இயந்திரக் கோளாறு காரணமாக வாக்குப்பதிவில் சிரமம் ஏற்பட்டுள்ளது’’ என்றனர். 

பிற்பகலில் வாக்களித்த ஏழுமலை

பிற்பகலில் வாக்குச்சாவடிக்குச் சென்ற முன்னாள் எம்.எல்.ஏவும், வேட்பாளாருமான ஏழுமலை தன்னுடைய வாக்கைப்பதிவு செய்தார். அப்போது அவர் சிரித்தமுகத்துடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.