‘ஜனநாயகக் கடமையாற்ற வந்த மூதாட்டி!’ -வாக்குச்சாவடி மையத்தில் உயிரிழந்த பரிதாபம் | Old woman dead at the polling center

வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (18/04/2019)

கடைசி தொடர்பு:07:41 (19/04/2019)

‘ஜனநாயகக் கடமையாற்ற வந்த மூதாட்டி!’ -வாக்குச்சாவடி மையத்தில் உயிரிழந்த பரிதாபம்

வாலாஜாபேட்டையில், தள்ளாத வயதில் வாக்களிப்பதற்காக வந்த 80 வயது மூதாட்டி, வாக்குச்சாவடி மையத்தில் சுருண்டுவிழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

துளசியம்மாள்

வேலூர் மாவட்டம், அரக்கோணம்  நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட வாலாஜாபேட்டை அனந்தலை கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரின் மனைவி துளசியம்மாள் (80). இவர், அனந்தலையில் உள்ள பண்டிட் மாளவியா நிதியுதவி பெறும் நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிப்பதற்காக உறவினர்களுடன் சென்றார். வாக்குச்சாவடி மையத்துக்குள் நுழைந்தபோது, துளசியம்மாளுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் சுருண்டுவிழுந்து மயக்கமடைந்தார்.

மூதாட்டியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் சப்-கலெக்டர் இளம்பகவத்.

உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால், வழியிலேயே மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். தள்ளாத வயதில் இறுதி மூச்சுவரை ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதற்காகப் போராடி மரணமடைந்த மூதாட்டி துளசிம்மாளுக்கு, தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ராணிப்பேட்டை சப்-கலெக்டரும் உதவி தேர்தல் அலுவலருமான இளம்பகவத், நேரில் சென்று இறுதிஅஞ்சலி செலுத்தினார்.

வாக்களிக்கும் உரிமையைக் கடைசிவரை விட்டுக்கொடுக்காத மூதாட்டியை நினைத்து பொதுமக்கள் ஏராளமானோர் நெகிழ்ச்சியடைந்து அஞ்சலிசெலுத்தினர்.