`அது, நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்!' - மு.க. அழகிரி சூசகம் | Former minister Mk Alagiri caste his vote in Madurai school

வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (18/04/2019)

கடைசி தொடர்பு:07:41 (19/04/2019)

`அது, நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்!' - மு.க. அழகிரி சூசகம்

இந்தியாவில் நடைபெறும் மக்களைவைத் தேர்தலில், கூடுதலாக இரண்டு மணி நேரம் வாக்குப்பதிவு நீட்டிக்கப்பட்ட சிறப்புத் தகுதியுடன் மதுரை மக்களவைத் தொகுதியில் தேர்தல் நடந்துவருகிறது.

சித்திரைத் திருவிழாவைக் காண உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் மதுரையில் குவிந்துகொண்டிருந்தாலும், மதுரை மக்கள் வாக்களிக்க மறக்கவில்லை. இன்று காலை 11 மணி நிலவரப்படி 25 சதவிகித வாக்குப்பதிவு நடந்துமுடிந்திருந்தது மக்களின் வாக்களிக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.

மு.க.அழகிரி

இந்த நிலையில், மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகேயுள்ள பள்ளிக்கு மதுரை ஆதீனம் வாக்களிக்க வந்தார். வழக்கத்துக்கு மாறாக இந்தமுறை தான் வாக்களிக்க வரும் தகவலை ஊடகங்களுக்குத் தெரிவித்துவிட்டு வருகை தந்தார். உடல் நலமில்லாத நிலையிலும் வீல் சேரில் அமர்ந்து வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், ``நாடு நலம்பெற மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். தமிழகத்தில் எடப்பாடி, ஓ.பி.எஸ் இணைந்து ஆட்சியைத் தொடர வேண்டும்' என்றார். ஒரு ஆதீன மடாதிபதி, குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கூறியுள்ளது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

மு.க.அழகிரி

இதேபோல, மதுரை டி.வி.எஸ். நகரிலுள்ள டி.வி.எஸ். பள்ளியில் வாக்களிக்க மு.க.அழகிரியும் அவர் மனைவி காந்தி அழகிரியும் வருகை தந்தனர். வாக்களித்துவிட்டு வந்தவர் ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல மறுத்துவிட்டார். `எந்தக் கட்சிக்கு் வெற்றிவாய்ப்பு உள்ளது' என்று வற்புறுத்திக் கேட்டதற்கு, "அது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்..." என்று சூசகமாகக் கூறிவிட்டு கிளம்பினார். இப்படி சித்திரைத் திருவிழா கொண்டாட்டத்துக்கு இடையில் பரபரப்பாகவும், கலகலப்பாகவும் மதுரை மக்களைவைத் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது.​

நீங்க எப்படி பீல் பண்றீங்க