`800 மீ பயணத்துக்காக 6 கி.மீ சுற்றிப் போகவேண்டியிருக்கிறது!' - தேர்தலைப் புறக்கணித்த மீனாட்சிபுரம் மக்கள் | Meenakshipuram village people boycott the election

வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (18/04/2019)

கடைசி தொடர்பு:07:42 (19/04/2019)

`800 மீ பயணத்துக்காக 6 கி.மீ சுற்றிப் போகவேண்டியிருக்கிறது!' - தேர்தலைப் புறக்கணித்த மீனாட்சிபுரம் மக்கள்

விருதுநகர் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராம மக்கள், சாலை வசதி இல்லாததால் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.

மீனாட்சிபுரம்

விருதுநகர் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில், சுமார் 450 வாக்காளர்கள் உள்ளனர். அந்தக் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கிராமத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்பதால், கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். அவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், உடன்பாடு ஏற்படாததால் பொதுமக்களின் போராட்டம் நீடித்துவருகிறது.

இதுகுறித்து அந்தக் கிராமத்தைச் சேர்ந்த கூடலிங்கம் என்பவரிடம் பேசினோம், ``கடந்த 10 ஆண்டுகளாக எங்கள் கிராமத்துக்கு சரியான சாலை வசதி இல்லை. இதனால், 800 மீ. செல்ல வேண்டிய பயணத்துக்காக 6 கி.மீ சுற்றி வர வேண்டியுள்ளது. இதை எடுத்துச் சொல்வதற்காக அரசு அதிகாரிகள், மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என நாங்கள் பார்க்காத ஆட்களே இல்லை.

மீனாட்சிபுரம்

ஆனால், எங்கள் கோரிக்கைகள் மட்டும் நிறைவேறவில்லை. அடிப்படை வசதிகள் செய்து தராவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என கடந்த பிப்ரவரி 25-ம் தேதிகூட ஆட்சியருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பினோம். ஆனாலும் எங்கள் கோரிக்கைகள் நிறைவேறவோ, எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவோ யாரும் வரவில்லை. ஓட்டு கேட்டு வந்த வேட்பாளர்களிடமும் இந்தப் பிரச்னையை எடுத்துக் கூறினோம். ஆனாலும் பதில் கிடைக்கவில்லை.

மீனாட்சிபுரம்

இன்று காலையிலிருந்து ஊரில் யாரும் வாக்களிக்கவில்லை. இதுவரை அதிகாரிகள் யாரும் எங்களிடம் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இதனால், இந்தத் தேர்தலில் நாங்கள் யாருக்கும் வாக்களிக்க மாட்டோம்'' என்று தெரிவித்தார்.