`எந்தப் பொத்தானை அழுத்தினாலும் இரட்டை இலைக்குத்தான் வாக்கு விழுகிறது!' - திருமாவளவன் | VCK leader Thirumavalavan alleges malfunction in EVM machines

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (18/04/2019)

கடைசி தொடர்பு:07:35 (19/04/2019)

`எந்தப் பொத்தானை அழுத்தினாலும் இரட்டை இலைக்குத்தான் வாக்கு விழுகிறது!' - திருமாவளவன்

"இரவில் மின்சாரத்தை அணைத்தைவிட்டு, அதிகாரிகளின் துணையோடு ஆளுங்கட்சியினர் பணப் பட்டுவாடா செய்திருக்கிறார்கள். இது தேர்தல்தானா, ஆளும் கட்சியினருக்கு ஒரு சட்டம் எங்களுக்கு ஒரு சட்டமா" என திருமாவளவன் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.

                                              

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், தனது சொந்த கிராமமான அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் உள்ள ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தனது தாயார் மற்றும் குடும்பத்துடன் வந்து வாக்கைப் பதிவுசெய்தார்.

                                           

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தொல் திருமாவளவன், ``தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்றுவரும் 39 மக்களவைத் தொகுதியிலும் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றிபெறும். ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்தப் பொத்தானை அழுத்தினாலும் இரட்டை இலைக்கு வாக்கு விழுவதாக ஒரு சிலர் தெரிவிக்கின்றனர். இதனை மாவட்டத் தேர்தல் அதிகாரி கவனத்தில்கொள்ள வேண்டும்.

தமிழகம் முழுவதும் வாக்காளர்கள் 100 சதவிகிதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும். ஒருபுறம் நரேந்திர மோடி தலைமையிலான மதவாத சக்திகள், இன்னொரு புறம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையிலான ஜனநாயக சக்திகள் இரு அணிகளாகப் பிரிந்து நின்று தேர்தலைச் சந்திக்கிறோம். ஜனநாயக சக்திகள் வெற்றிபெற்றால், நாட்டில் ஜனநாயகம் காப்பாற்றப்படும் என நம்புகிறேன். காவல்துறை அதிகாரிகள், தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள், ஆளும் கட்சியான அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணிக் கட்சிகளுக்கு வெளிப்படையாகவே ஒரு சார்பாக ஆதரவு நிலையெடுத்துச் செயல்பட்டு வந்துள்ளார்கள். இன்றைக்காவது நடுநிலைமையோடு இருந்து தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தமிழகம் மற்றும் அகில இந்திய அளவில் ஜனநாயக சக்திகள் வெற்றிபெறுவார்கள். மோடி தலைமையிலான ஆட்சி அகற்றப்படும்.

                                               

மத்தியில் ஒரு நல்ல அரசு அமையும். தமிழகத்தில் ஒரு நல்ல ஆட்சி அமையும். இந்திய அளவில் தமிழகத்தில்தான் வாக்குக்கு பணம் என்ற கலாசாரம் மேலோங்கியுள்ளது. இது கவலை அளிக்கும் செயல். ஆளும் தரப்பைச் சேர்ந்த யார் மீதும் வருமான வரித் துறை சோதனை நடத்தியதாகத் தகவல் இல்லை. ஆனால் தி.மு.க கூட்டணிக் கட்சி வேட்பாளர்களைக் குறிவைத்து வருமான வரித் துறை சோதனை நடத்திவருகிறது. எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த, தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறையைச் சேர்ந்த அதிகாரிகளை ஆட்சியாளர்கள் பயன்படுத்தியுள்ளார்கள் என்பது வேதனை அளிக்கிறது. அதேபோல, சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில், இரவு  மின்சாரத்தை அணைத்தைவிட்டு பணத்தைக் கொடுத்திருக்கிறார்கள். இது எல்லாம் அதிகாரிகளுக்குத் தெரியாதா. இதை எல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களுக்கு நல்ல பாடம் புகட்டப்போகிறார்கள். நேர்மையாகத் தேர்தலை நடத்தக்கூடிய துணிவும் அதிகாரமும் தேர்தல் ஆணையம் மற்றும் அதிகார வர்க்கத்தினருக்கு இல்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும்" எனக் கூறினார்.