`ஆர்வம் காட்டாத இளைஞர்கள்' - வீல் சேரில் வந்து வாக்களித்த முதியவர்கள்! | Old age peoples cast their votes in Coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (18/04/2019)

கடைசி தொடர்பு:07:35 (19/04/2019)

`ஆர்வம் காட்டாத இளைஞர்கள்' - வீல் சேரில் வந்து வாக்களித்த முதியவர்கள்!

கோவையில், ஆதரவற்றோர் காப்பகத்தில் உள்ள முதியோர்கள், தங்களது வாக்கை அளித்தனர்.

முதியோர்கள் வாக்கு

தமிழகம் முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. இதில், கோவை மாவட்டத்தில், கோவை மற்றும் பொள்ளாச்சி ஆகிய இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஈரநெஞ்சம் ஆதரவற்றோர் காப்பகம் உள்ளது. அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட முதியவர்கள்  இருக்கின்றனர்.  உறவுகளால் கை விடப்பட்ட இந்த முதியோர்களுக்கு, அடிப்படைத் தேவைகள் கிடைப்பதே அரிதான விஷயம்தான். இந்நிலையில், இந்த முதியோர்களை வாக்களிக்க வைப்பதற்கான முயற்சியில் ஈரநெஞ்சம் அறக்கட்டளை ஈடுபட்டது.

தொடர் முயற்சியின் விளைவாக, அதில் 59 முதியோர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டு, வாக்காளர் அடையாள அட்டையும் வழங்கப்பட்டன. அவர்கள் அனைவரும்  காலை 10 மணி முதலே அருகில் உள்ள ஆர்.எஸ்.புரம் மாநகராட்சிப் பள்ளியில் வாக்களிக்கச் சென்றனர். வீல் சேர்கள் மற்றும் சிறப்பு வாகன ஏற்பாடுகள் செய்யப்பட்டு, முதியோர்கள் வாக்குச் சாவடி மையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

நீண்ட வரிசையில் நின்று, அவர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர். இதுகுறித்து வாக்களித்தவர்களில் ஒரு மூதாட்டியான அமுதா, "இதற்கு முன்பு நான் ஒருமுறைதான் வாக்களித்திருந்தேன். தற்போது, இரண்டாவது முறை வாக்களித்திருப்பது, மிகவும் திருப்தியளிக்கிறது. ஆனால், எங்களுக்கு அடிப்படைத் தேவைகள் எல்லாம் அரசு செயல்படுத்தித் தர வேண்டும்" என்றார்.