கடந்த தேர்தலைக்காட்டிலும் வாக்குப்பதிவு குறைவு! - தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு காரணமா? | Polling percentage dipped in TN compared to previous election

வெளியிடப்பட்ட நேரம்: 17:41 (18/04/2019)

கடைசி தொடர்பு:07:36 (19/04/2019)

கடந்த தேர்தலைக்காட்டிலும் வாக்குப்பதிவு குறைவு! - தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு காரணமா?

தமிழகத்தில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலைக்காட்டிலும், வாக்குப்பதிவு எண்ணிக்கை குறைந்துள்ளது. 100 சதவிகிதத்தை இலக்காகக் கொண்டு தேர்தல் ஆணையம் செயல்படும்போது, கடந்த தேர்தலைக்காட்டிலும் வாக்குப்பதிவு குறைவாகப் பதிவாகிவருவது, பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குபதிவு தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. காலை முதலே தங்கள் வாக்குகளைப் பதிவுசெய்ய வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் குவிந்துவருகின்றனர். காலை 9 மணிக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு நிலவரம் வெளியிடப்பட்டது. அதில் 13.48 சதவிகிதம் என குறிப்பிடப்பட்டது. ஆனால், கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை 9 மணி அளவில் 14.31 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின.

வாக்கு இயந்திரம்

அதேபோல, 11 மணி நேர நிலவரப்படி 30.62 சதவிகிதம் மட்டுமே பதிவானது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலைக்காட்டிலும் இது 4.66 சதவிகிதம் குறைவுதான். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், இந்த வாக்குப்பதிவில் ஏற்பட்ட சுணக்கத்துக்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதாவது, பல்வேறு பகுதிகளில் வாக்காளர்கள் பெயர் இடம்பெறாமல் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது. `இறந்தவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறது. எங்கள் பெயர் இடம்பெறவில்லை' என்று பொதுமக்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்தினர் .

எடப்பாடி

அதேபோல, கடலூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பரிசுப்பெட்டி சின்னத்துக்கான பட்டன், வாக்குப்பதிவு இயந்திரத்தில் இடம்பெறவில்லை எனப் புகார் எழுந்தது. அதேபோல, பூந்தமல்லி இடைத்தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏழுமலை வாக்களிக்கச்சென்றபோது, இயந்திரம் பழுதாகிவிட்டது. ஆனால், அவர் விரலில் மை வைத்துவிட்டனர். இதனால், வாக்கை பதிவுசெய்ய முடியாமல் திரும்பிச்சென்றார். பின்னர், பிற்பகலில் சென்றுதான் அவரால் வாக்களிக்க முடிந்தது.

சத்ய பிரதா சாஹூ

தமிழகத்தில், 3 மணிநேர நிலவரப்படி 52.02 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் 55 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. கரூரில், அதிகபட்சமாக 56 சதவிகிதமும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 45.65 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகம் முழுவதும் 73 சதவிகித வாக்குகள் பதிவாகின. ஆனால் இம்முறை, 70 சதவிகிதத்தை நெருங்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. தேர்தல்குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளைத் தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியும், கடைசி நேர குழப்பத்தால் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்துள்ளது.