கோவையில் பேருந்துகள் இயங்கவில்லை - நீலகிரி செல்ல முடியாமல் கைகுழந்தையுடன் தவித்த மக்கள்! | No buses for Coimbatore to Nilgiris

வெளியிடப்பட்ட நேரம்: 18:37 (18/04/2019)

கடைசி தொடர்பு:19:14 (18/04/2019)

கோவையில் பேருந்துகள் இயங்கவில்லை - நீலகிரி செல்ல முடியாமல் கைகுழந்தையுடன் தவித்த மக்கள்!

கோவையில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு பேருந்துகள் கிடைக்காததால், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

பேருந்து நிலையம்

தமிழகம் முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. இதையடுத்து,  வெளியூர் மக்கள், தங்களது ஊருக்கு செல்வதற்காக நேற்று மாலை முதலே  புறப்பட்டுச் சென்றனர். ஆனால், பேருந்துகள் கிடைக்காததால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கூடலூர் போன்ற பகுதிகளில் இருந்து பலரும் கோவையில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள், தங்களது வாக்கை அளிப்பதற்காக, நேற்று முதல் சாய்பாபா கோயில் புதிய பேருந்து நிலையத்தில் குவிந்து வருகின்றனர். ஆனால், போதுமான பேருந்துகள் இயங்காததால், இரவு முதல் பலர் தங்களது கைக்குழந்தைகளுடன் காத்திருக்கின்றனர். 

இதுகுறித்து பேருந்துக்காகக் காத்திருந்தவர்களிடம் பேசியபோது, "இரவு முதலே பேருந்துகள் வரவில்லை. இங்கிருந்து நீலகிரி செல்ல 4 மணி நேரமாகும். மேலும், அங்கிருந்து எங்களது கிராமங்களுக்குச் செல்லவும் தாமதமாகும். அரசுத் தரப்பில் இவ்வளவு கவனக்குறைவாக இருந்தால், நாங்கள் எப்படி வாக்களிப்பது?" என்று கேள்வி எழுப்பினர். 

இது தொடர்பாக, நீலகிரி தி.மு.க வேட்பாளர் ராசா மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆகியோரின் கவனத்துக் கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து, நீலகிரிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று ராசாமணி தெரிவித்துள்ளார்.