‘‘வாக்குப்பதிவின்போதும் ஐ.டி ரெய்டு; இது ஜனநாயக நாடா?’’ - துரைமுருகன் ஆவேசம் | Is this a democratic Country? duraimurugan angry

வெளியிடப்பட்ட நேரம்: 18:25 (18/04/2019)

கடைசி தொடர்பு:07:38 (19/04/2019)

‘‘வாக்குப்பதிவின்போதும் ஐ.டி ரெய்டு; இது ஜனநாயக நாடா?’’ - துரைமுருகன் ஆவேசம்

‘‘வாக்குப்பதிவு நடக்கிறபோதும் வருமான வரித் துறையினர் சோதனை செய்கிறார்கள். இது, ஜனநாயக நாடா?’’ என்று தி.மு.க பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ஓட்டுப்போட்ட துரைமுருகன்

அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட காட்பாடியில், தி.மு.க பொருளாளர் துரைமுருகன் வசித்துவருகிறார். இன்று காலை 9.30 மணிக்கு தனது மகன் கதிர்ஆனந்த் மற்றும் குடும்பத்தினருடன் வாக்களிப்பதற்காக, காந்தி நகர் டான்போஸ்கோ பள்ளி வாக்குச்சாவடி மையத்திற்கு துரைமுருகன் வந்தார். ஓட்டு போட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன், ‘‘தேர்தல் நேரத்தில் வருமான வரித் துறையை ஏவிவிடுவது அதிகார துஷ்பிரயோகம். இந்தியாவில் காபந்து சர்க்காராக இருக்கும்போது, நடுநிலையோடு இயங்கக்கூடிய சிபிஐ, வருமானவரித் துறையை பிரதமர் மற்றும் அவரின் கீழ் இருப்பவர்கள் இயக்கக் கூடாது. 

இதுவரையில், தேர்தல் காலங்களில் எதிர்க்கட்சிகள்மீது வருமான வரித் துறையை கட்டவிழ்த்துவிட்டு வேட்டையாடியது கிடையாது. இந்தியாவில் இதுதான் முதல்முறை. நிர்வாகம், நீதிமன்றம், சட்டமன்றம் மூன்றும் தனித்தனியாக இயங்க வேண்டும் என்பதுதான் அரசியல் சட்டத்தின் நோக்கம். எதிர்க்கட்சிகளை அடக்குவதற்காக சர்வாதிகாரப் போக்குடன் செயல்படுகிறார்கள். இது, தவிர்க்கப்பட வேண்டும். ஒரு பக்கம் வாக்குப்பதிவு நடைபெறும் நேரத்தில், மறுபக்கம் வருமான வரித் துறை சோதனை நடக்கிறது. இதைப் பார்க்கும்போது, ஜனநாயக நாடா... என்கிற கேள்வி எழுகிறது’’ என்றார்.