`தாலி கட்டியதும் பூத்துக்கு போய்விட்டோம்' - திருமணக் கோலத்தில் வாக்குப்பதிவு செய்த தம்பதி | Newly married couple cast thier vote after marriage

வெளியிடப்பட்ட நேரம்: 20:24 (18/04/2019)

கடைசி தொடர்பு:07:54 (19/04/2019)

`தாலி கட்டியதும் பூத்துக்கு போய்விட்டோம்' - திருமணக் கோலத்தில் வாக்குப்பதிவு செய்த தம்பதி

சென்னையில், திருமணம் முடிந்த கையோடு வாக்குச்சாவடிக்குச் சென்று, தங்களுடைய வாக்கை மணமக்கள் பதிவுசெய்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.

மணமக்கள்

சென்னை பெருங்குடி சீவரம் சரவணன் நகர் பகுதியைச் சேர்ந்தவர், மணிமாலா (22). இவருக்கும்  சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் (23) என்பவருக்கும் இன்று காலை திருமணம் நடந்தது. கோயிலில் வைத்து மணிமாலா கழுத்தில் தாலி கட்டினார் மணிகண்டன். அப்போது மணமகள், நான் ஓட்டு போட வேண்டும் என்று கணவரிடம் கூறினார். உடனே இருவரும் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு திருமணக் கோலத்திலேயே சென்றனர். அப்போது, வாக்களிக்க வரிசையில் காத்திருந்தவர்கள், மணமக்களை ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

வாக்குப்பதிவு

மணமகள் மணிமாலா, தன்னுடைய  வாக்கைப்  பதிவுசெய்தார். அதுவரை மணமகன் அங்கு காத்திருந்தார். இதையடுத்து சைதாப்பேட்டைக்கு மனைவியுடன் சென்ற மணிகண்டன், அங்கு தன்னுடைய  வாக்கைப் பதிவுசெய்தார். அதன்பிறகு, மணமகள் மணிமாலா கூறுகையில், "ஓட்டு போடுவது ஜனநாயகக் கடமை. எனக்குத் திருமணம் முடிந்த கையோடு இங்கு வந்தேன். திருமணம் முடிந்ததும் என் முதல் ஆசையை அவரிடம் சொன்னதும் அதை நிறைவேற்றிவிட்டார்"என்றார். மணமகன் மணிகண்டன் கூறுகையில், "தேர்தலுக்கு முன் திருமணத் தேதியை முடிவுசெய்துவிட்டோம். திருமணம் முடிந்ததும் நாங்கள் இருவரும் ஓட்டு போட்டது சந்தோஷமாக உள்ளது "என்றார்.