பெண் இன்ஸ்பெக்டரால் பரபரப்பு - கீழ்விஷாரத்தில் பா.ம.க-வினர் திரண்டதால் துப்பாக்கிச்சூடு! | PMK alliance party cadres engaged heated argument with police in Kilvisharam

வெளியிடப்பட்ட நேரம்: 20:18 (18/04/2019)

கடைசி தொடர்பு:20:18 (18/04/2019)

பெண் இன்ஸ்பெக்டரால் பரபரப்பு - கீழ்விஷாரத்தில் பா.ம.க-வினர் திரண்டதால் துப்பாக்கிச்சூடு!

அரக்கோணத்தை அடுத்த கீழ்விஷாரத்தில், வாக்குச்சாவடி மையம் அருகே குவிந்த அ.தி.மு.க, பா.ம.க-வினரை கலையச் செய்வதற்காக, துணை ராணுவப் படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால், பதற்றம் நிலவியது.

கீழ்விஷாரம் வாக்குச்சாவடி முன்பு குவிந்த பா.ம.க-வினர்.

அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கீழ்விஷாரம் ராசாத்திபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தைப் பார்வையிடுவதற்காக, பா.ம.க-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய இணையமைச்சர் அரங்க வேலு மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ இளவழகன் ஆகியோர் இன்று மாலை சென்றனர். அப்போது, அவர்களின் காரை ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி மடக்கி, வாக்குச்சாவடி மையப் பகுதி வழியாக செல்லக் கூடாது என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனைக் கவனித்த அங்கிருந்த அ.தி.மு.க மற்றும் பா.ம.க கூட்டணிக் கட்சியினர் சுமார் 200 பேர் திரண்டுவந்தனர். இதனால், போலீஸாருக்கும் பா.ம.க-வினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

பதற்றமான சூழல் நிலவியதால், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவப் படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். ‘‘நாங்கள் என்ன தவறு செய்தோம். துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கிறீர்கள்’’ என்றுப் பா.ம.க-வினர் கேள்வி எழுப்பினர். சம்பவம் நடந்த பகுதிக்கு அரக்கோணம் பா.ம.க வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி மற்றும் வேலூர் மாவட்ட எஸ்.பி பிரவேஷ்குமார், ராணிப்பேட்டை சப்-கலெக்டர் இளம் பகவத் விரைந்துவந்தனர். அரசியல் கட்சியினரை சமரசம் செய்தனர். இதனையடுத்து, அ.தி.மு.க, பா.ம.க-வினர் கலைந்துசென்றனர்.

இதுபற்றி மாவட்ட கலெக்டர் ராமனிடம், பா.ம.க அரங்க வேலு மற்றும் இளவழகன் இருவரும் புகார் செய்தனர். சம்பந்தப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்திருக்கிறார். துப்பாக்கிச்சூட்டால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.