`12மணி நேரம் வேலைபார்த்துவிட்டேன்;இனிமேலும் முடியாது!' - சரக்கு ரயிலை நிறுத்திய டிரைவர் | Goods train engine driver stops train in midway in Vaitheeswaran koil station

வெளியிடப்பட்ட நேரம்: 20:48 (18/04/2019)

கடைசி தொடர்பு:15:23 (19/04/2019)

`12மணி நேரம் வேலைபார்த்துவிட்டேன்;இனிமேலும் முடியாது!' - சரக்கு ரயிலை நிறுத்திய டிரைவர்

`12 மணி நேரம் வேலைபார்த்துவிட்டேன். இனி, ஒரு நிமிடம்கூட என்னால் ரயிலை இயக்க முடியாது' என்று கூறி, சரக்கு ரயிலை பாதிவழியில் நிறுத்திச் சென்ற ஓட்டுநரால், வைத்தீஸ்வரன்கோயிலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நடுவழியில் நிறுத்தப்பட்ட சரக்கு ரயில்

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோயில் ரயில் நிலையம் உள்ளது. இரண்டு இருப்புப்பாதை கொண்ட சிறிய ரயில் நிலையம் என்பதால், அவ்வழியே இயக்கப்படும் பாசஞ்சர் ரயில்கள் மட்டுமே 2 நிமிடம் நின்று செல்லும். ஒரு நாளைக்கு இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமே நிற்கும். அதேபோல, நெய்வேலியில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு காரைக்கால் துறைமுகத்திற்குச் செல்லும் சரக்கு ரயில்கள், தினமும் வைத்தீஸ்வரன்கோயில் ரயில் நிலையத்தைக் கடந்துதான் செல்லும். அதுபோல, இன்றும் சரக்கு ஏற்றிவந்த ரயில், வைத்தீஸ்வரன்கோயில் ரயில் நிலையத்தில் திடீரென நிறுத்தப்பட்டது. வைத்தீஸ்வரன்கோயில் ரயில்  நிலைய அதிகாரி , சிக்னல் சரியாக இருந்தும் சரக்கு ரயில் ஏன் நிறுத்தப்பட்டது என்று ரயிலை இயக்கி வந்த டிரைவர் முத்துராஜாவிடம் கேட்டுள்ளார். 

நடுவழியில் நிறுத்தப்பட்ட சரக்கு ரயில்


அதற்கு முத்துராஜா,`My duty time is over. Iam exhausted. 12 மணி நேரம்தான் நான் பணி செய்ய வேண்டும். ஆனால், ரயிலை 12 மணி நேரம் 15 நிமிடம் இயக்கிவிட்டேன். இனி 1 நிமிடம்கூட வேலைபார்க்கமுடியாது. ரயிலை வேறு டிரைவர் வைத்து இயக்கிக்கொள்ளுங்கள்' என்று கூறியதாக வைத்தீஸ்வரன்கோயில் ரயில்நிலைய அதிகாரி தெரிவித்தார். சரக்கு ரயிலில் பெட்டிகள் அதிகம் என்பதால், வைத்தீஸ்வரன்கோயில் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட ரயிலின் பெட்டிகள், வைத்தீஸ்வரன்கோயில் - புங்கனூர் சாலையில் இருக்கும் ரயில்வே கேட்டைத் தாண்டி 100 மீட்டர் வரை நின்றது. இதனால், ரயில்வே கேட் திறந்தும் குறுக்கே ரயில் நிற்பதால் சாலையைக் கடக்க முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

பொதுமக்கள் அவதி

இதையடுத்து, ரயில்நிலைய அதிகாரி டிரைவர் முத்துராஜாவிடம்,``வைத்தீஸ்வரன்கோயிலுக்கு அடுத்து வரும் முக்கிய ரயில்நிலையமான மயிலாடுதுறை வரை ரயிலை இயக்குங்கள். அங்கிருந்து வேறு டிரைவர் ரயிலை இயக்கிக்கொள்வார். இன்னும் 10 நிமிடம் வேலை செய்யுங்கள்'' என்று கேட்டுப்பார்த்தார். அதற்கு சம்மதம் தெரிவிக்காத டிரைவர் முத்துராஜா, 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, பொதுமக்கள் கோரிக்கை வைத்ததையடுத்து சரக்கு ரயிலை மயிலாடுதுறை ரயில்நிலையம் வரை இயக்க ஒப்புக்கொண்டார்.

வைத்தீஸ்வரன் கோயில்


சரக்கு ரயில் வைத்தீஸ்வரன்கோயில் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதால், இரண்டு மணி நேரம் வைத்தீஸ்வரன்கோயில் - புங்கனூர் சாலை முடங்கியது. 2 மணி நேரத்திற்குப் பிறகு ரயில் இயக்கப்பட்டதால், திருப்பதியில் இருந்து காரைக்கால் வரை செல்லும் பாமணி எக்ஸ்பிரஸ் வைத்தீஸ்வரன்கோயில் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. டிரைவர் முத்துராஜாவின் அலட்சியத்தால், சிதம்பரம் மார்க்கத்தில் இருந்து அந்த வழியாக இயக்கப்படும் ரயில்கள் சிக்னல் சரி இல்லாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க