கன்னியாகுமரி அருகே கத்தி, கம்புகளுடன் மோதிக்கொண்ட அரசியல் கட்சியினர்! - பா.ஜ.க-வினருக்கு கத்திக் குத்து | Clash between BJP and AMMK cadres in Kanyakumari

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (18/04/2019)

கடைசி தொடர்பு:07:55 (19/04/2019)

கன்னியாகுமரி அருகே கத்தி, கம்புகளுடன் மோதிக்கொண்ட அரசியல் கட்சியினர்! - பா.ஜ.க-வினருக்கு கத்திக் குத்து

கன்னியாகுமரி தொகுதியில், வாக்குச்சாவடிக்குள் ஏற்பட்ட பிரச்னை, வெளியே வந்தபிறகு பூதாகரமாக மாறியது. அதில், அ.ம.மு.க, தி.மு.க, காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் பா.ஜ.க-வினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில், பா.ஜ.க-வினர் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்கள்

கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட பூதப்பாண்டியை அடுத்த வீரவநல்லூர் அரசு தொடக்கப் பள்ளியில் இன்று வாக்குப்பதிவு நடந்தது. அப்போது, வாக்குச்சாவடிக்குள் பூத் சிலிப் கொடுக்கும்போது பா.ஜ.க, நிர்வாகிகளுக்கும் அ.ம.மு.க நிர்வாகிகளுக்குமிடையே கேலிப் பேச்சு எழுந்துள்ளது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு வெளியே வந்த பா.ஜ.க-வினரிடம், அ.ம.மு.க, தி.மு.க, காங்கிரஸ் பிரமுகர்கள் இதுகுறித்து கேள்வி கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக வெடித்துள்ளது. இதில் கத்தி, கம்பிகளால் இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர். 

காயமடைந்தவர்

அதில், பா.ஜ.க-வைச் சேர்ந்த சதீஷ், பழனியப்பன், மணிகண்டன், பரமேஸ்வரன், சரவணன் ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் தொண்டர்களை கன்னியாகுமரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பொன்.ராதாகிருஷ்ணன் ஆறுதல்

அதேநேரம், அ.ம.மு.க-வைச் சேர்ந்த சிலர் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகித்ததாகவும், அதுகுறித்து பா.ஜ.க-வினர் தட்டிக்கேட்டதால் பிரச்னை வெடித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், பா.ஜ.க-வினர் தாக்கியதாக அ.ம.மு.க-வைச் சேர்ந்த சிலரும் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பூதப்பாண்டி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.