`நம் உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்கக் கூடாது!' - 101 வயதில் வாக்களித்து அசத்திய முன்னாள் எம்.பி | 101 year old Ex mp caste his vote in Erode

வெளியிடப்பட்ட நேரம்: 21:53 (18/04/2019)

கடைசி தொடர்பு:07:55 (19/04/2019)

`நம் உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்கக் கூடாது!' - 101 வயதில் வாக்களித்து அசத்திய முன்னாள் எம்.பி

எம்.பி

நூறு வயதைக் கடந்த முன்னாள் எம்.பி ஒருவர், தள்ளாத வயதிலும் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களித்தே தீருவேன் என ஜனநாயகக் கடமையாற்றி, அசரவைத்திருக்கிறார்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுகா சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர், எஸ்.கே.பரமசிவன். சிறுவயதிலிருந்தே காங்கிரஸ் கட்சிமீது ஈடுபாடுகொண்டிருந்தவர், பல்வேறு போராட்டங்களிலும் கலந்துகொண்டு கட்சி வளர்ச்சிக்காகப் பாடுபட்டிருக்கிறார். வினோபாவே, 1951-ம் ஆண்டு பூமிதான இயக்கத்தைத் தொடங்கி தமிழ்நாட்டிற்கு வந்தபோது, பரம்பரைச் சொத்தில் தனக்கு கிடைத்த ஒரு பகுதியை அதற்காக வழங்கினார். ஈரோட்டை அடுத்த முத்துக்கவுண்டன்பாளையத்தில் 10 வருடங்கள் பஞ்சாயத்துத் தலைவராக இருந்திருக்கிறார். அதன்பிறகு, கோவை  மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எனப் பல பதவிகளை வகித்திருக்கிறார். காமராஜரிடம் நெருங்கிய நட்பில் இருந்தவர். அவருடைய ஆசியால் 1962-ல் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு எம்.பி சீட்டைப் பெற்று, எம்.பி ஆனவர்.

எம்.பி-யாக இருந்த காலகட்டத்தில், தொகுதியில் விவசாயிகளுக்காக நிறையத் திட்டங்களைக் கொடுத்திருக்கிறார். அதிலும் குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் இவரால் ஆரம்பிக்கப்பட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்குப் பிறகுதான், தமிழத்தின் அனைத்து இடங்களிலும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் ஆரம்பிக்கப்பட்டன. அதேபோல, மஞ்சளுக்கான கூட்டுறவுச் சங்கம் என அனைத்து கூட்டுறவுச் சங்கங்களும் உருவாவதற்குக் காரணமாக இருந்திருக்கிறார்.

எம்.பி

பதவிக் காலத்தில் இப்படி சிறப்பாகச் செயல்பட்டவருக்கு, இப்போது 101 வயதாகிறது. ஈரோடு சின்னியம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் ஓய்வெடுத்துவருகிறார். உதவியாளர் துணையுடன்தான் கைத்தாங்கலாக நடக்கிறார். இப்படிச் சிரமமான சூழ்நிலையிலும் இன்றைக்கு வாக்களித்தே தீருவேன் என குடும்பத்தாருடன் ஈரோடு சின்னியம்பாளையம் அரசுப் பள்ளிக்குச் சென்று வாக்களித்திருக்கிறார்.

வாக்குச் சாவடியில், நடக்க முடியாதவர்களுக்கு சக்கர நாற்காலிகள் இருந்தபோதிலும், எஸ்.கே.பரமசிவன் அவருடைய உதவியாளர் கையைப் பிடித்துக்கொண்டு போய் உற்சாகமாக வாக்களித்திருக்கிறார். இதுகுறித்து அவரிடம் பேசுகையில், "வாக்களிப்பது நம்முடைய உரிமை. நம்முடைய உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்கக் கூடாது. உடல்நிலை சரியில்லாமல் கொஞ்சம் சிரமப்பட்டாலும், வாக்களித்தே தீருவேன் என நான் வாக்களித்து வந்திருக்கிறேன்" என்றார் உற்சாகமாக. 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரசாரம் செய்துவந்த வேளையில், 101 வயதான முன்னாள் எம்.பி ஆர்வமாக வாக்களிக்க வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.