தமிழகத்தில் முதன்முறையாக மனநலக் காப்பகவாசிகள் 156 பேர் வாக்களிப்பு! | mental illness controlled persons cast their votes

வெளியிடப்பட்ட நேரம்: 22:05 (18/04/2019)

கடைசி தொடர்பு:07:56 (19/04/2019)

தமிழகத்தில் முதன்முறையாக மனநலக் காப்பகவாசிகள் 156 பேர் வாக்களிப்பு!

தமிழ்நாட்டில் முதல் முறையாக மனநலக் காப்பகவாசிகள் 156 பேர் தனி வாக்குச்சாவடியில் வாக்களித்துள்ளனர்.

மனநிலை காப்பகவாசிகள்

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மனநலக் காப்பகம் செயல்பட்டுவருகிறது. தினமும் 400- 500 பேர் புறநோயாளிகளாகச் சிகிச்சைபெற்றுச் செல்கின்றனர். தொடர்சிகிச்சை தேவைப்படுபவர்கள், உள்நோயாளிகளாகச் சேர்க்கப்படுகின்றனர். சராசரியாக 800 பேர் இந்தக் காப்பகத்தில் உள்நோயாளிகளாகத் தங்கியுள்ளனர். இவர்களில் கணிசமானவர்கள் மனநோய் குணமாகியும் கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலும் உள்ளனர். குடும்பத்தினர், உறவினர் இல்லாதவர்களும் மீண்டும் குடும்பத்துடன் சேர்த்துக்கொள்ளப்படாதவர்களும் இங்கேயே வசிக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர்.

தேர்தல்

இப்படிப்பட்டவர்களை அவர்களின் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பது அரசின் கடமை என பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான உடன்படிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் இதில் கையெழுத்திட்டுள்ள இந்தியா உட்பட்ட நாடுகளில், குணமான- கட்டுப்படுத்தப்பட்ட மனநோயாளிகளின் பராமரிப்பு மோசமாகவே உள்ளது. தனியாரை ஒப்பிட கீழ்ப்பாக்கம், அரசு மனநலக் காப்பகத்தில் ஓரளவுக்கு இவர்கள் பராமரிக்கப்பட்டுவருகின்றனர். இந்நிலையில், இவர்களுக்கு பொதுத்தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைச் செயல்படுத்த முயற்சி எடுக்கப்பட்டது. இதையொட்டி, 192 பேர் வாக்களிக்க முடிவுசெய்யும் திறன் உள்ளவர்கள் எனக் கணக்கிடப்பட்டது.

கடந்த வாரம் தேர்தல் பணியாளர்கள் மூலம் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இதற்காக உள்நோயாளிகள் வளாகத்தில் உள்ள தலைமை மேற்பார்வையாளர் அலுவலகத்தில் சிறப்பு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை, 156 பேர் வாக்களித்தனர். இந்தப் பணியில், கீழ்ப்பாக்கம், அரசு மனநலக் காப்பகத்தின் பொறுப்பு இயக்குநர் மருத்துவர் பூர்ணசந்திரிகா தலைமையில், 12 மருத்துவர்கள், 24 செவிலியர்கள், பிற பணியாளர்கள் 20 பேர் பணியாற்றினர். அதிகாரபூர்வமாக மாலையில் வாக்குப்பதிவு முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.