`100% தேர்ச்சி!'- அசத்திய நீலகிரி அரசு பழங்குடியின உண்டு உறைவிடப்பள்ளி மாணவர்கள் | Government Tribal residential school 100% pass

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (19/04/2019)

கடைசி தொடர்பு:14:00 (19/04/2019)

`100% தேர்ச்சி!'- அசத்திய நீலகிரி அரசு பழங்குடியின உண்டு உறைவிடப்பள்ளி மாணவர்கள்

 

பள்ளி

தமிழகத்தில் ப்ளஸ் டூ பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் 3,284 மாணவர்களும், 4,057 மாணவியர்கள் என மொத்தம் 7,341 பேர் தேர்வு எழுதினார்கள். இந்த நிலையில் ப்ளஸ் டூ பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. நீலகிரி மாவட்டத்தில் 2,858 மாணவர்கள், 3,813 மாணவியர்கள் என மொத்தம் 6,671 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் 90.87 சதவிகிதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் நீலகிரி மாவட்டத்தில் இயங்கிவரும் ஒரே அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி கோத்தகிரியை அடுத்துள்ள குஞ்சப்பனை பழங்குடி கிராமத்தில் உள்ளது.

நீலகிரி

இருளர் பழங்குடிகள் அதிகம் உள்ள இந்தப் பகுதியில் 206 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் 24 பேர் 12 -ம் வகுப்புத் தேர்வை எழுதி 24 மாணவ மாணவிகளும் தேர்ச்சி அடைந்து சாதித்துள்ளனர். மேலும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் 451 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார்.

இதுகுறித்து பள்ளித் தலைமையாசிரியர் வினுதாஸ் கூறுகையில், ``நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பழங்குடியினருக்கான மேல்நிலைப்பள்ளி இங்கு மட்டுமே உள்ளது. பெரும்பாலும் வறுமையில் உள்ள முதல் தலைமுறை மாணவர்களே அதிகம். இவர்களை கல்வியில் மேம்படுத்தும் வகையில் ஆசிரி்யர்கள் இரவு பகல் பாராமல் உழைத்தனர். இதன் பயனாக 100% தேர்ச்சி கிடைத்துள்ளது. மேலும், எங்கள் பள்ளியில் பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் 451 மதிபெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். அவர்  அரசு நடத்தும் நீட் பயிற்சி தகுதித் தேர்வில் வெற்றி பெற்று கோவையில் நீட் பயிற்சி பெற்று வருகிறார்" என்றார்.