அரியலூர் மோதல்: பா.ம.க-வுக்கு உதவுகிறதா அ.தி.மு.க? - விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் காட்டம் | Araiyalur fightm police in action

வெளியிடப்பட்ட நேரம்: 14:31 (19/04/2019)

கடைசி தொடர்பு:14:31 (19/04/2019)

அரியலூர் மோதல்: பா.ம.க-வுக்கு உதவுகிறதா அ.தி.மு.க? - விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் காட்டம்

அரியலூர் மாவட்டம் பொன் பரப்பி கிராமத்தில் இருதரப்பினரிடையே  நடைபெற்ற மோதலைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் தொடர், போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மக்களைச் சந்தித்து ஆறுதல் சொல்லிப் பேசினார் திருமாவளவன்.

 


அரியலூர் மாவட்டம் பொன் பரப்பி கிராமத்தில் நேற்று மாலை வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. அப்போது வாக்குப்பதிவு மையத்தின் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சின்னமான பானைச் சின்னத்தை சிலர் ரோட்டில் போட்டு உடைத்ததால் பா.ம.க, வி.சி.க இரு கட்சியினருக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்றது. தகராறில், 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. தாக்குதலில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தால் அரியலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் வி.சி.க தொண்டர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட வி.சி.க தொண்டர்களிடம் பேசினோம், ``நாங்கள் எத்தனை வருடம்தான் இவர்களுக்காக பயந்துகொண்டு வாழ்வது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் எங்கள் தலைவரை வேட்பாளராக அறிவித்த நாள்முதல் பா.ம.க-வினர் தொடர் பிரச்னையில் ஈடுபட்டு வந்தனர். அதை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. வாக்குப் பதிவு நாளான நேற்று காலை பானைச் சின்னத்தை மக்கள் மறந்துவிடக் கூடாது என்பதற்காகப் பொட்டிக்கடையில் பானையை வைத்திருந்தோம். எங்கள் மீதுள்ள கோபத்தால் அந்தப் பானையை வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த சிலர் உடைத்தனர்.

அவர்கள் உடைத்த பிறகுதான் இப்பிரச்னையே வெடித்தது. இந்தக் கலவரத்தில் ஈடுபட்ட வன்னியர்களைக் காப்பாற்ற அ.தி.மு.க உள்ளிட்ட அரசியல்கட்சியினர் மற்றும் போலீஸார் ஈடுபடுகிறார்கள். இவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். இல்லையேல் தொடர் போராட்டம் வெடிக்கும்” என்று எச்சரித்தார்.
தாக்குதலில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர்களைப் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு புதுக்கோட்டைக்குப் புறப்பட்டார் திருமாவளவன். மேலும், பொன் பரப்பில் கிராமத்தில் பிரச்னைகளைத் தவிர்க்க போலீஸார் அதிக அளவில் குவிந்துள்ளனர்.