இலங்கை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட 'இராவணா 1' செயற்கைக்கோள் - வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது! | The launch of 'Ravana 1' satellite made by Sri Lankan students was launched.

வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (19/04/2019)

கடைசி தொடர்பு:15:45 (19/04/2019)

இலங்கை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட 'இராவணா 1' செயற்கைக்கோள் - வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!

 இலங்கைப் பொறியியல் மாணவர்கள் இருவரால் தயாரிக்கப்பட்ட ‘இராவணா-1’ செயற்கைக்கோள், இன்று  அதிகாலை 2.16 மணியளவில்   விண்ணில் ஏவப்பட்டது. 

இராவணா 1 செயற்கை கோளை எடுத்து செல்லும் ராக்கெட்

ஆர்த்தர் சீ. க்ளாக் மையத்தின் முன்னாள் ஆணையாளர் சனத் பனாவென்னாவின் வழிகாட்டுதலின்படி இந்த செயற்கைக்கோள் தயாரிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு, 'இராவணா- 1' என்று  பெயரிடப்பட்டது. ஜப்பானின் கியூஷு தொழிநுட்ப நிறுவனத்தில், பொறியியல்  கல்வி கற்றுவரும் தரிந்து தயாரத்ன மற்றும் துலானி சாமிகா விதானகே ஆகிய இருவரும் இலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள். இவர்கள் இருவருமே இந்த ‘இராவணா 1’ செயற்கைக்கோளை தயாரித்துள்ளனர்.

 

இராவணா 1 செயற்கை கோள் 
 

அமெரிக்காவின் – வெர்ஜினியா மாகாணத்திலிருந்து நாசா விண்வெளி நிறுவனத்தின் ஏவுகணைமூலம், புவியிலிருந்து சுமார்  400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து இராவணா 1 ஏவப்பட்டது. இராவணனின் விண்வெளி தொழில்நுட்பத்தை உலகிற்கு எடுத்துக்கூறும் நோக்கில் இந்த செயற்கைக்கோளுக்கு 'இராவணா 1' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள், சர்வதேச விண்வெளி மையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டதன் பின்னர், வரும் மே அல்லது ஜுன் மாதத்தில் விண்ணில் நிலைநிறுத்தப்படவுள்ளது. இந்த செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட பின்னர், நாளொன்றுக்கு 15 தடவை பூமியைச் சுற்றி வலம்வர உள்ளது.

இந்த செயற்கைக்கோளின் வேகம், விநாடிக்கு 7.6 கிலோ மீட்டராகும்.  ஜப்பானின் கியூஷு பல்கலைக் கழகத்தின் பர்டிஸ் என்ற சிறப்பு திட்டத்தின்கீழ் தயாரிக்கப்பட்டுள்ள ஆயிரம் கன செ.மீ நீளமுடைய இராவணா – 1 செயற்கைக் கோள், 1.1 கிலோ கிராம் எடை கொண்டதாகும். இலங்கையையும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் நிழற்படம் எடுத்தல் உள்ளிட்ட 5 செயற்பாடுகளை  இந்த செயற்கைக்கோள் மூலம் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.