வாட்ஸ்அப்பில் உலா வந்த வீடியோ - பொன்னமராவதியில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட கலவரம்! | The riot between the two communities at ponnamaravathi

வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (19/04/2019)

கடைசி தொடர்பு:17:23 (19/04/2019)

வாட்ஸ்அப்பில் உலா வந்த வீடியோ - பொன்னமராவதியில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட கலவரம்!

ஒரு சமூகத்தினரை, மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் தவறாகச் சித்திரித்து, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறு வீடியோ வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. பொன்னமராவதியில் பாதிக்கப்பட்ட அந்தச் சமூகத்தினர் வீடியோ வெளியிட்டவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டதோடு, போலீஸ் வாகனங்கள், போலீஸார் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பொன்னமராவதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

கலவரம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மற்றொரு சமூகத்தினரை தவறாகச் சித்திரித்து அவதூறு வீடியோ ஒன்றை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வளைதலங்களில் உலவவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோவைப் பார்த்துக் கோபமடைந்த மாற்றுச் சமூகத்தினர், தவறான வீடியோ வெளியிட்டவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று கூறி பொன்னமராவதி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் குற்றவாளிகளை கைது செய்வதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நேற்று இரவு பொன்னமாரவதியில் உள்ள கடைகள், மற்றும் வாகனங்களை உடைத்து வன்முறையில் ஈடுபட்டனர்.

கலவரம்

தொடர்ந்து பதற்றம் அதிகரிக்கவே ஆயுதப்படை காவலர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பொன்னமராவதியில் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து இன்று காலை உடனே கைது செய்ய வலியுறுத்தி அந்தச் சமூகத்தினர் புதுக்கோட்டை-பொன்னமராவதி சாலையில் ஆங்காங்கே 500க்கும் மேற்பட்ட பெண்கள் துடைப்பத்துடன் வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மரங்களை வெட்டி சாலைகளை அடைத்தனர். பொன்னமராவதி காவல் நிலையத்தில் குவிந்த அந்த மக்கள் இதே கோரிக்கையை வலியுறுத்திக் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். புதுக்கோட்டை எஸ்பி சம்பவ இடத்திற்கு வந்து குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

கலவரம்

ஆனாலும், அமைதியடையாத மக்கள் காவல் நிலையத்திற்குள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றனர். சிறிது நேரத்தில் பெரும் கலவரமாக மாறியது. அப்போது, போலீஸாருக்கும்- போராட்டக்காரர்களுக்கும் இடையே பெரும் கலவரம் வெடித்தது. கற்கள் வீசியதில் காவல்நிலையம் அருகே நின்ற புதுக்கோட்டை, பொன்னமராவதி டிஎஸ்பி, ஆலங்குடி இன்ஸ்பெக்டர் கார், 3ஆயுதப்படை வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. கல்வீச்சு தாக்குதலில் 5 போலீஸார் காயமடைந்தனர். பொதுமக்கள் 2 பெண்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கலவரம் அதிகமாகவே அதைக் கட்டுப்படுத்த வானத்தை நோக்கி போலீஸார் இருமுறை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் சிறிது நேரத்தில் போலீஸார் கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கலவரம்

தொடர்ந்து, போராட்டக்காரர்களுடன் திருச்சியிலிருந்து வந்த அதே சமூகத்தைச் சேர்ந்த வக்கீல் பேச்சுவார்த்தை நடத்தினார். போலீஸ் தரப்பில் வீடியோ வெளியிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து இரண்டு நாள்களுக்குள் கைது செய்கிறோம் என்று கூறியதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், சமாதானம் ஆகவில்லை. தொடர்ந்து டிஐஜி லலிதா லட்சுமி சம்பவ இடத்திற்கு வந்தார்.

கலவரம்

பொன்னமராவதி முழுவதும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இங்கிருந்து, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட வெளியூர்களுக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. போக்குவரத்து முழுவதும் நிறுத்தப்பட்டது. கலவரத்தால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால், நோயாளிகள் சாப்பாடு கிடைக்காமல் அவதியடைந்தனர். பேச்சுவார்த்தை முடிந்தாலும், தொடர்ந்து பொன்னமராவதியில் பதற்றமான சூழ்நிலைதான் நிலவி வருகிறது.