`ப்ளஸ் டூ தேர்வில் மாநிலத்தில் இரண்டாமிடம்..ஆனால்...?' - ஈரோட்டின் கடந்த கால எக்ஸாம் ரிப்போர்ட் | State second rank but? - Actual +2 results reports in erode

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (19/04/2019)

கடைசி தொடர்பு:16:40 (19/04/2019)

`ப்ளஸ் டூ தேர்வில் மாநிலத்தில் இரண்டாமிடம்..ஆனால்...?' - ஈரோட்டின் கடந்த கால எக்ஸாம் ரிப்போர்ட்

2018-19ம் ஆண்டுக்கான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.23 சதவிகித தேர்ச்சி பெற்று, தமிழக அளவில் ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடத்தைப் பிடித்து அசத்தியிருக்கிறது.

தேர்வு

கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கிய பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19-ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 8,69,423 மாணவ, மாணவியர்கள் இந்தத் தேர்வை எழுதினர். வழக்கமாக மே மாத இறுதியில் வெளியாகும் தேர்வு முடிவுகள் இந்த முறை, தேர்தல் காரணமாக முன்கூட்டியே இன்று வெளியாகியிருக்கின்றது. தமிழக அளவில் தேர்வெழுதியதில் 91.3 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

தேர்வு

ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை மாணவர்கள் 11,490 பேர் மற்றும் மாணவிகள் 12,826 பேர் என மொத்தம் 24,316 பேர் தேர்வெழுதினர். இதில் 10, 847 மாணவர்களும், 12,308 மாணவிகளும் என மொத்தம் 23,155 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். அதாவது 94.40 மாணவர்களும், 95.96 மாணவிகளும் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். மொத்தத்தில் 95.23 சதவிகித தேர்ச்சி பெற்று தமிழக அளவில், அதிக தேர்ச்சி பெற்ற இரண்டாவது மாவட்டம் என்ற சிறப்பை ஈரோடு மாவட்டம் பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஈரோடு மாவட்டம் மாநில அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

வழக்கம்போல இந்த முறையும் ஈரோடு மாவட்டத்தில் மாணவிகளே அதிகளவு தேர்ச்சி பெற்றிருந்தனர். இன்டர்நெட் காலத்திலும், பள்ளியில் ஒட்டப்பட்டிருந்த தேர்வு முடிவுகளைப் பார்த்து மாணவ, மாணவிகள் உற்சாகத்தில் குதூகலித்தனர்.பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 2016-ம் ஆண்டு 96.92 சதவிகிதம், 2017-ம் ஆண்டு 96.69 சதவிகிதம், 2018-ம் ஆண்டு 96.35 சதவிகிதம் என ஈரோடு மாவட்டத்தினுடைய தேர்ச்சி விகிதம் படிப்படியாகக் குறைந்து வந்தது. 2019-ம் ஆண்டு 95.23 சதவிகித தேர்ச்சி பெற்று மாநில அளவில் ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தாலும், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தேர்ச்சி விகிதம் குறைந்திருக்கிறது என்பதுதான் உண்மை.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளியிடம் பேசினோம். "கடந்த ஆண்டை விட ஒரு சதவிகித அளவிற்கு தேர்ச்சி விகிதம் குறைந்திருக்கிறது என்பது உண்மை தான்.  நம்மால் முடிந்த அளவிற்கு சிறப்பான கல்வியையும், பயிற்சியையும் மாணவர்களுக்குக் கொடுத்து வருகிறோம். இருந்தாலும் இந்த தேர்ச்சி விகிதத்தினை அதிகப்படுத்த வேண்டுமென, மெதுவாகக் கற்கும் திறன் கொண்ட மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்படும். தமிழகத்தில் நம்முடைய மாவட்டம் இரண்டாம் இடத்தினைப் பிடித்ததைப் போல, அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களின் தேர்ச்சி விகிதத்திலும் 92.38 சதவிகிதம் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருக்கிறோம்" என்றார்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தன்னுடைய சொந்த மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் குறைந்து வருவதைக் கவனிப்பாரா?...