தேர்ச்சி விகிதத்தில் பின்தங்கிய விருதுநகர் மாவட்டம் - என்ன காரணம்? | virudhunagar the backward district from top in education

வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (19/04/2019)

கடைசி தொடர்பு:17:25 (19/04/2019)

தேர்ச்சி விகிதத்தில் பின்தங்கிய விருதுநகர் மாவட்டம் - என்ன காரணம்?

மேல்நிலைப் பள்ளி தேர்ச்சி விகிதத்தில், பல ஆண்டுகளாக முதலிடம் பிடித்துவந்த விருதுநகர் மாவட்டம், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தில் 7-வது இடத்துக்குப் பின்தங்கியுள்ளது.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் 208 மேல்நிலைப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. 11,246 ஆண்கள், 13,501 பெண்கள் என மொத்தம் 24,747 பேர் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் 10,413 பெண்கள், 12,958 பெண்கள் என மொத்தம் 23,371 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 94.44 ஆக உள்ளது. கடந்த ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டும் தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்த விருதுநகர் மாவட்டம், இந்த ஆண்டு 7-வது இடத்துக்குப் பின்தங்கியுள்ளது.

விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 17, சிவகாசி கல்வி மாவட்டத்தில் 34, ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் 27, அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 6 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சிபெற்றுள்ளன. கடந்த 2001-2002-ம் கல்வியாண்டில் இருந்து 2010-2011-ம் ஆண்டு கல்வியாண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகளாக முதலிடத்தைத் தக்கவைத்த விருதுநகர், பின்தங்க ஆரம்பித்தது. சில ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது. ஆனால் தற்போது, முதலிடத்தில் இருந்து மீண்டும் 7-வது இடத்துக்குப் பிந்தங்கியது, கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவாமிநாதன்

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன் கூறும்போது, ``ஆசிரியர்கள் அனைவரும் நன்றாகவே பாடம் நடத்தினர். கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கும் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அப்படி இருந்தும், கடந்த ஆண்டை விட 0.93 சதவிகிதம் தேர்ச்சியில் குறைந்துள்ளது. பாடத்திட்டம் மாற்றத்தால் தேர்ச்சி குறைந்துள்ளதா எனத் தெரியவில்லை. தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கான காரணம் என்ன என்பதுகுறித்து பள்ளித் தலைமையாசிரியர்களிடம் விசாரணை நடத்த உள்ளோம்'' என்று தெரிவித்தார்.