போக்குவரத்தைக் கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப் பயணிகள் தவிப்பு! | police doesn't take any action to reduce traffic Nilgiri Ooty area

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (19/04/2019)

கடைசி தொடர்பு:07:08 (20/04/2019)

போக்குவரத்தைக் கண்டுகொள்ளாத நீலகிரி எஸ்.பி - சுற்றுலாப் பயணிகள் தவிப்பு!

பள்ளிகளுக்கு விடுமுறை தொடங்கிவிட்டது. தேர்தலும் முடிந்தாகிவிட்டது. கொளுத்தும் கோடை வெயிலிலிருந்து தப்பிக்க, மக்கள் கோடை வாசஸ்தலங்களை நோக்கி படையெடுக்கத்  தொடங்கிவிட்டனர். தென்னிந்திய சுற்றுலாப் பயணிகளின் தேர்வுகளில் ஊட்டி முக்கிய அங்கம் வகிக்கிறது

.சுற்றுலாப்பயணிகள்

சுற்றுலாத் தலங்கள் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு, சுமார் 40 லட்சம் சுற்றுலாப் பயணிகள் நீலகிரியைக் கண்டு ரசித்துச் சென்றனர். வழக்கமாக, மே மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படும். ஆனால் இந்தாண்டு, சமவெளிப் பகுதிகளில் நிலவும் வெயிலின் தாக்கம் காரணமாக, இப்போதே பயணிகளின் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. ஊட்டி வரும் சுற்றுலாப் பயணிகளின் முக்கியப் பிரச்னையாக இருப்பது போக்குவரத்து நெரிசல். சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்குள் நுழையவும்  ஓர் இடத்திலிருந்து  மற்றோர் இடத்துக்குச் செல்ல பல மணி நேரம் சாலையில் காத்துக்கிடக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல்

இதுகுறித்து சுற்றுலா வழிகாட்டி ஜான் கூறுகையில், " ஒரே சமயத்தில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்கு வருவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வேலிவியூ பகுதியில் இருந்து ஊட்டி நகருக்குள் 1 கி.மீ வருவதற்கே சில சமயம் ஒரு மணி நேரம் ஆகிறது. அதேபோல, அரசு தாவரவியல் பூங்காவிலிருந்து தொட்டபெட்டா 8 கி.மீ சென்றுவர, சில சமங்களில் ஒரு நாளே வீணாகிறது. இதற்கெல்லாம் முக்கியக் காரணம், காவல் துறையினர் போக்குவரத்தை முறைப்படுத்தாதே. கடந்த ஆண்டு கோடை சீசனில் அப்போதைய எஸ்.பி முரளிரம்பா போக்குவரத்துக்கு முக்கிய கவனம் செலுத்தி சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் பாதிப்படையா வகையில் பார்த்துக்கொண்டார்.

ஆனால், தற்போது உள்ள நீலகிரி  எஸ்.பி, போக்குவரத்தைக் கண்டுகொள்வதேயில்லை. இதனால், ஊட்டி வரும் சுற்றுலாப் பயணிகள் சலிப்புடனே திரும்பிச்செல்கின்றனர் " என்றார்.