கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை! | 5 dead in Tiruvannamalai while Well drilling work

வெளியிடப்பட்ட நேரம்: 21:11 (19/04/2019)

கடைசி தொடர்பு:21:11 (19/04/2019)

கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் பலி - காவல்துறை விசாரணை!

திருவண்ணாமலை அருகே கிணறு தோண்டும் பணியை முடித்துவிட்டு கிரேன் மூலம் மேலே ஏறும்போது, எதிர்பாரத விதமாக  கயிறு அறுந்ததில் 6 பேர் கிணற்றுக்குள் விழுந்தனர். அதில் 5 பேர் தலை நசுங்கி கிணற்றுகுள்ளேயே  பலியானார்கள். ஒருவர் மட்டும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பலி

திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தில் இயங்கி வருகிறது சரஸ்வதி வித்யாலயா பள்ளி. இந்தப் பள்ளிக்கு, தண்ணீர் தேவைக்காக கடந்த ஒரு மாதமாக பெரிய அளவில் பள்ளி வளாகத்திற்குள் கிணறு தோண்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று கிணறு தோண்டும் பணியில் தாமரைப்பாக்கம் மற்றும் அன்னதல் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளிகள் வேலு, தணிகாசலம், ரவிச்சந்திரன், ஜெயமோகன், பிச்சாண்டி ஆகியோர் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

உயிரிழப்பு

பணியை முடித்துவிட்டு மாலை 4 மணி அளவில் கிணற்றுக்குள்ளிருந்து, மண்வாருவதற்குப் பயன்படுத்தப்படும் கிரேன் மூலம் 6 பேரும் மேலே வந்துள்ளார்கள். எதிர்பாராத விதமாக கிரேனின் ரோப் கயிறு பளு தாங்காமல் அறுந்ததால், அனைவரும் கிணற்றுக்குள்ளேயே மொத்தமாக விழுந்தனர். இதில், வேலு, தணிகாசலம், ரவிச்சந்திரன், ஜெயமோகன், பிச்சாண்டி ஆகிய ஐந்துபேர் தலை நசுங்கி கிணற்றுக்குள்ளேயே பலியானார்கள். மேலே ஏறுவதற்கு பயன்படுத்தப்பட்ட கயிறு சரியான பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து இருந்துள்ளது.

கிணறு

அப்படியிருக்கும் நிலையில் 6 பேரும் ஒரே அடியாக மேலே வந்ததால் பளு தாங்காமல் ரோப் கயிறு அறுந்துள்ளது. பளுவான  கயிற்றைப் பயன்படுத்தாமல் இருந்ததே இந்தச் சம்பவத்திற்கு மைய காரணம். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அனைவரது உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருவண்ணாமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து, சம்பவம் நடந்தது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த, இறந்தவர்களின் உறவினர்கள் பள்ளி நிர்வாகத்தின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த டவுன் பஸ்ஸை மடக்கி கண்ணாடிகளை உடைத்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க