வன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு! | 144 imposed over 30 villages near pudukottai

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (19/04/2019)

கடைசி தொடர்பு:22:00 (19/04/2019)

வன்முறை எதிரொலி - பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு!

பொன்னமராவதியில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து, பொன்னமராவதி தாலுகாவிற்குட்பட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

144 தடை

ஒரு சமூகத்தினரை, மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் தவறாகச் சித்திரித்து வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறு வீடியோவை வெளியிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகவே, தங்களைத் தவறாகச் சித்திரித்து வீடியோ வெளியிட்டவர்களை உடனே கைது செய்யக்கோரி மனு கொடுத்தனர். தொடர்ந்து போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி பாதிக்கப்பட்ட சமூக மக்கள் பொன்னமராவதி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல் நிலையத்திற்குள் கற்களை வீசியதோடு, போலீஸ் வாகனங்கள் மற்றும் போலீஸார் மீதும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பெரும் கலவரம் ஏற்பட்டது. தாக்குதல் நடத்தியவர்களைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக, வானத்தை நோக்கி போலீஸார் இரு முறை துப்பாக்கியால் சுட்டனர். தொடர்ந்து அடிதடி நடத்தி கூட்டத்தினரைக் கலைத்தனர். பொன்னமராவதி சிறிது நேரத்தில் கலவர பூமியானது. பதற்றமான சூழ்நிலை நிலவியதால், ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து, அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பொன்னமராவதியில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மத்திய மண்டல காவல்துறை ஐஜி வரதராஜூ தலைமையில், திருச்சி சரக டிஐஜி லலிதா லெட்சுமி, தஞ்சாவூர் சரக டிஐஜி லோகநாதன், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, புதுக்கோட்டை எஸ்பி செல்வராஜ், தஞ்சாவூர் சரக எஸ்பி ஜியாஉல்ஹக் ஆகியோர் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினர். 

 இதைத் தொடர்ந்து பொன்னமராவதி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எவ்வித குந்தகமும் ஏற்படாத வகையில், பொன்னமராவதி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்தத் தடை உத்தரவானது ஏப்ரல் 19ம் தேதி முற்பகல் 12மணி முதல் ஏப்ரல் 21ம் தேதி முற்பகல் 12மணி வரையிலும் அமலில் இருக்கும் எனவும் இலுப்பூர் வருவாய் கோட்ட அலுவலர் சிவதாஸ் உத்தரவு பிறப்பித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனிடையே 144 தடை உத்தரவு போடப்படாத பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.