`தியானம் செய்ததுதான் தேர்ச்சி விகிதம் உயரக் காரணம்!' - திருப்பூர் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் | Tirupur government school headmaster speaks about exam result

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (20/04/2019)

கடைசி தொடர்பு:08:00 (20/04/2019)

`தியானம் செய்ததுதான் தேர்ச்சி விகிதம் உயரக் காரணம்!' - திருப்பூர் அரசுப் பள்ளி தலைமையாசிரியர்

தியானத்தின் உதவியால் மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் உயர்ந்திருப்பதாக திருப்பூர் அரசுப்பள்ளியின் தலைமையாசிரியர் தெரிவித்திருக்கிறார்.

தலைமையாசிரியர்

12 - ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்தது. இந்த நிலையில், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இயங்கும் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12 -ம் வகுப்பு தேர்வில் சுமார் 93.88 சதவிகித தேர்ச்சி அடைந்துள்ளது. முதல்முறையாக இந்தாண்டு அதிகபட்சமாக 90 சதவிகிதத்துக்கும் மேல் தங்களது பள்ளி மாணவர்கள் தேர்ச்சியடைந்திருப்பது பற்றி அப்பள்ளியின் தலைமையாசிரியர் பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது, ``கடந்த 2 வருடங்களுக்கு முன் எங்களது பள்ளியின் தேர்ச்சி சதவிகிதம் மிகவும் குறைவாகவே இருந்தது. அந்த நிலையில்தான் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மாணவர்களுக்குத் தியானப் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. அதன்மூலம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே இருந்த மன வேறுபாடுகள் களையப்பட்டது. அத்துடன் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களைப் பெற்றோர்களாகவே ஏற்றுக்கொண்டு முறையாகப் படித்ததன் மூலம் தற்போது இந்த இலக்கை மாணவர்கள் எட்டியிருக்கிறார்கள். மேலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் முழுமையாக 100 சதவிகிதம் தேர்ச்சியைப் பெறுவோம். அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்த காரணத்தால்தான் திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்திருக்கிறது என்று தெரிவித்தார்.