`வாக்குச்சாவடியை பா.ம.க-வினர் கைப்பற்ற நினைத்தார்கள்!' - திருமாவளவன் குற்றச்சாட்டு | pmk trying to capture booths thirumavalavan allegation

வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (20/04/2019)

கடைசி தொடர்பு:08:30 (20/04/2019)

`வாக்குச்சாவடியை பா.ம.க-வினர் கைப்பற்ற நினைத்தார்கள்!' - திருமாவளவன் குற்றச்சாட்டு

தேர்தல் நாளன்று நடைபெற்ற வன்முறைக்கு காரணமானவர்களைக் கைது செய்யாத தமிழக அரசையும் காவல் துறையையும் கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் 24-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தொல்.திருமாவளவன் ஆவேசமாகப் பேசினார்.

                                            வன்முறை

அரியலூர் மாவட்டம் பொன் பரப்பி கிராமத்தில் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. அப்போது வாக்குப்பதிவு மையத்தின் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சின்னமான பானைச் சின்னத்தை வன்னியர் சமுகத்தைச் சேர்ந்த சிலர் ரோட்டில் போட்டு உடைத்ததால் பா.ம.க, வி.சி.க இரு கட்சியினருக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்றது. தகராறில், 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. தாக்குதலில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தால் அரியலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் வி.சி.க தொண்டர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இச்சம்பவத்தைக் கண்டித்து தொல்.திருமாவளவன் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

                               

``தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாகப் பெரும்பான்மையான மக்கள் வாக்களித்துள்ளார்கள்.  தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றி பெறும். 18 சட்டமன்ற இடைத் தேர்தலிலும் தி.மு.க மாபெரும் வெற்றி பெறுவது உறுதி. அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக்கு எதிராக மக்கள் வெளிப்படையாகவே தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அது இந்தத் தேர்தலில் எதிரொலிக்கும் தோல்வி பயத்தால் பல இடங்களில் அ.தி.மு.க கூட்டணியினர் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள்.

                                        

வாக்குப் பதிவுக்கு முன்பாகவே வாக்குப்பதிவு மையங்களைக் கைப்பற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் பொதுக்கூட்டங்கள் மட்டும் பிரசாரங்களில் பேசியுள்ளார். சாதி, மத அடிப்படையில் உணர்வுகளைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார்கள். அதன் எதிரொலியாக ஜெயங்கொண்டம் மற்றும் அரியலூர் சட்டமன்றத்துக்குட்பட்ட பல இடங்களில் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவதற்கான முயற்சி நடைபெற்றது. அதன் விளைவாக சில இடங்களில் வன்முறை ஏற்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

                                           

தமிழக அரசையும் காவல் துறையையும் கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் 24-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அரசியலை அரசியலாகப் பார்க்க வேண்டும் இதை வைத்துச் சாதி அரசியலைத் தூண்டக்கூடாது காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், ஆளுங்கட்சி கூட்டணிக்குச் சாதகமாகத் தொடர்ந்து நடந்து வருவது வேதனை அளிக்கிறது.

                                           

அதேபோல்  இச்சம்பவத்தில் செய்தியாளர்கள் தாக்கப்பட்டது கண்டனத்துக்குரியது. இதுபோல் ஊடகவியலாளருக்கு எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அது கண்டனத்துக்குரியது இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கும்'' எனக் கூறினார்.