`இது நீண்டநாள் பிளான்; சசிகலாவை ஓரங்கட்டும் தினகரன்!' - பொதுச்செயலாளர் பின்னணி | ttv try to capture ammk party

வெளியிடப்பட்ட நேரம்: 10:49 (20/04/2019)

கடைசி தொடர்பு:14:58 (20/04/2019)

`இது நீண்டநாள் பிளான்; சசிகலாவை ஓரங்கட்டும் தினகரன்!' - பொதுச்செயலாளர் பின்னணி

`தினகரன் தன்னை முன்னிலைப்படுத்தவே, பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கட்சியை தன்வசப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே அவரது எண்ணம். தேர்தல் பிரசாரத்தில் கூட அவர் சசிகலா பெயரைப் பயன்படுத்தவில்லை'

டிடிவி தினகரன்

ஒருவழியாக தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்துமுடிந்துவிட்டது. அடுத்தகட்டமாக கட்சியைப் பலப்படுத்தவும், உட்கட்சி பூசல்களைக் கவனிக்கும் வேலைகளிலும் அரசியல் கட்சிகள் களமிறங்கியுள்ளன. அந்த வகையில் அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் டி.டி.வி.தினகரன். தலைவர் பதவி உருவாக்கப்பட உள்ளதாகவும், அந்தப் பதவி சசிகலாவுக்கு கொடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. பொதுச்செயலாளர் பதவிதான் பலம்வாய்ந்தது என்பது யாரும் அறியாமல் இல்லை.

தினகரன்

இதுகுறித்து விசாரித்தபோது, ``இது இன்றோ, நேற்றோ முடிவு செய்யப்பட்டதில்லை. தான் பொதுச்செயலாளராக வேண்டும் என்பது தினகரனின் நீண்ட நாள் திட்டம். தேர்தல் காரணமாக திட்டத்தைத் தள்ளிவைத்திருந்தார். தேர்தல் முடிந்த கையோடு, முதல்வேலையாக நேற்று அவசர கூட்டத்தைக் கூட்டினார். இதுதொடர்பாக நேற்றுமுன்தினம் இரவே மாவட்டச் செயலாளர்கள் சென்னைக்கு வர உத்தரவிடப்பட்டது. கூட்டத்தில் பேசிய தினகரன், `கட்சியை வலுப்படுத்தவேண்டிய சூழலுக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். சின்னத்த வாங்குறதுக்கு நாம எவ்ளோ கஷ்டப்பட்டோம்னு உங்களுக்குத் தெரியும். அ.ம.மு.க-வை கட்சியா பதிவுசெய்யணும். அதுக்காகத்தான் இப்போ கூடியிருக்கோம்' என்றார். சின்னம்மா வர்ற வரைக்கும் பொறுத்திருக்கலாம் என சசிகலா ஆதரவாளர்கள் கூற, `அடுத்த 4 தொகுதி இடைத்தேர்தல் வர இருக்கு. அதனால, கட்சிய பதிவு செஞ்சே ஆகணும்.

சசிகலா

கட்சிய பதிவு செய்யணும்னா பொதுச்செயலாளர் கையெழுத்து வேணும். அதுக்காகத்தான் பதவி உருவாக்கணும்னு சொல்றேன். சசிகலா அ.தி.மு.க-வுல பொதுச்செயலாளராக இருக்காங்க. அந்த கேஸ் நடந்திட்டு இருக்கு. அதனால அவங்க வெளியே வந்ததும், அ.தி.மு.க -வை நம்ம பக்கம் கொண்டுவர அனைத்து முயற்சியும் எடுத்துக்கலாம்' என்று கூற, சுற்றியிருந்தவர்கள் அமைதியாகிவிட்டனர். இதன்மூலம் பொதுச்செயலாளர் வைபோகம் அரங்கேறியுள்ளது'' என்கிறார்கள். தொடர்ந்து, விவரித்தவர்கள், ``4 தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் பரிசுப்பேட்டி சின்னத்தைக் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் மன்றாடமுடியாது.

அவசரக்குழு

அப்படிக் கேட்டாலும் பரிசுப்பெட்டி சின்னம் கிடைக்காது. சுயேச்சையாகத்தான் தேர்தல் ஆணையம் கருதும். `கட்சியாகப் பதிவு செய்கிறோம்' என்று உறுதியளித்தது குறித்து கேள்வி கேட்கப்படும். கட்சியாகப் பதிவு செய்யாவிட்டால், நிலையான சின்னமில்லாமல் ஊசலாடவேண்டியிருக்கும் என்பதால் இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறார். இருந்தபோதிலும், சசிகலாவை ஓரம்கட்டிவிட்டு, கட்சியை தன்வசப்படுத்தவும் அவர் நினைக்கிறார்.

தேர்தல் பிரசாரங்களில்கூட அவர், சசிகலா பெயரை முன்னிலைப்படுத்தவில்லை. தினகரன்தான் அ.ம.மு.க என மாற்ற நினைக்கிறார். தன்னைப் பொதுச்செயலாளராக அறிவித்ததன் மூலம், சசிகலா ஆதரவாளர்கள் வெளியேறும் அபாயம் இருப்பதையும் அவர் அறிந்தே வைத்திருக்கிறார். அதனால்தான், அ.தி.மு.க-வில் பொதுச்செயலாளராக சசிகலா இருக்கிறார். அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால்தான் அவரை அ.ம.மு.க-வின் பொதுச்செயலாளராக அறிவிக்கவில்லை என்று சமாதானம் செய்துவருகிறார். மேலும், வழக்கு முடிய  காலதாமதம் ஏற்பட்டால், கட்சியில் தலைவர் பதவியை உருவாக்கி, அதில்  சசிகலாவை அமரவைத்து, ஆதரவாளர்களின் வாயை அடைத்துவிடலாம் எனத் திட்டமிட்டுள்ளார்'' என்கிறார்கள் அ.ம.மு.க வட்டாரத்தில்.