`இப்படியொரு தேர்தல் பஞ்சாயத்து' - எம்.பி-க்கு 27, எம்.எல்.ஏ-வுக்கு 37 `எக்ஸ்ட்ரா' ஓட்டுக்கள்? | Opposition parties alleges admk captures booth in Tiruvallur

வெளியிடப்பட்ட நேரம்: 14:04 (20/04/2019)

கடைசி தொடர்பு:14:04 (20/04/2019)

`இப்படியொரு தேர்தல் பஞ்சாயத்து' - எம்.பி-க்கு 27, எம்.எல்.ஏ-வுக்கு 37 `எக்ஸ்ட்ரா' ஓட்டுக்கள்?

பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலின்போது பூந்தமல்லி கன்னப்பாளையம், மேட்டுப்பாளையத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் அ.தி.மு.க-வினர் கள்ள ஓட்டுக்கள் போட்டதாக தகவல் வெளியானது. இந்தத் தேர்தல் பஞ்சாயத்தை தேர்தல் ஆணையம் கவனமாக விசாரித்துவருகிறது.

தேர்தல் பஞ்சாயத்து

திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் நாடாளுமன்றம் மற்றும் பூந்தமல்லி சட்டமன்றத்துக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது. பூந்தமல்லியை அடுத்த கன்னப்பாளையத்தின் அருகில் உள்ள மேட்டுப்பாளையத்தில் பூத் எண் 195 அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் பூத்தில் எம்.பி., எம்.எல்.ஏ. ஆகிய தேர்தலுக்கான ஓட்டுக்கள் கணக்கீடப்பட்டது. 858 ஓட்டுக்கள் பதிவானதாக அரசு ஊழியர்கள் அறிவித்தனர். பூட்டிய பூத்துக்குள் அ.தி.மு.க.வைச் சேர்ந்த பூத் எஜென்ட்கள் மட்டும் இருந்ததாகவும் அரசு ஊழியர்களின் உதவியோடு அவர்கள் கள்ள ஓட்டுக்கள் போட்டதாகவும் தி.மு.க மற்றும் அ.ம.மு.க. பூத் ஏஜென்ட்கள் குற்றம் சாட்டினர். இதனால் பூத் எண் 195ல் பரபரப்பு ஏற்பட்டது. 

சம்பவ இடத்துக்கு தி.மு.க-வினரும் அ.ம.மு.க.வினரும் குவிந்தனர். அவர்களிடம் தேர்தல் நடத்தும் அலுவலர் ரத்னா பேச்சுவார்த்தை நடத்தினார். கட்சியினர் கூட்டத்தை போலீஸார் கட்டுப்படுத்தினர். சமசர பேச்சுவார்த்தைக்குப்பிறகு வாக்கு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது. அதற்கு அ.ம.மு.க-வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதை அ.தி.மு.க-வின் ஒன்றியச் செயலாளர் முத்துகிருஷ்ணனின் மகன் சதீஷ் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் சதீஷ் தாக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவரை போலீஸார் பத்திரமாக மீட்டனர். 

தேர்தல் பஞ்சாயத்து

பூத் எண் 195-ல் கள்ள ஓட்டு போட்டுவிட்டதாக கூறியதையடுத்து மாவட்ட தேர்தல் அலுவலரான மகேஸ்வரி விசாரணை நடத்தினார். இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, ``தேர்தல் ஆணையத்துக்கு ரிப்போர்ட் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இனிமேல் ஆணையம்தான் முடிவெடுக்க வேண்டும்" என்றார். 

தமிழக தேர்தல் தலைமை அலுவலர் சத்யபிரதா சாகுவிடம் கேட்டதற்கு ``ரிப்போர்ட்டை நான் இன்னும் பார்க்கவில்லை. ரிப்போர்ட் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். 

சம்பந்தப்பட்ட பூத்தில் என்ன நடந்தது, உண்மையிலேயே அ.தி.மு.க-வினர் கள்ள ஓட்டுக்கள் போட்டார்களா என்று விசாரித்தோம். 

பூந்தமல்லி நகர தி.மு.க-வைச் சேர்ந்த ரவி கூறுகையில்,`` மேட்டுப்பாளையத்தில் அமைக்கப்பட்டிருந்த பூத்தில் வாக்குப்பதிவு முடிந்தபிறகு அ.தி.மு.க-வைச் சேர்ந்த பூத் ஏஜென்ட்கள் மட்டும் உள்ளே இருந்துள்ளனர். அதன்பிறகு பதிவான ஓட்டுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது எம்.பிக்கு 27 ஓட்டுக்களுக்கும்  எம்.எல்.ஏ-வுக்கு 37 ஓட்டுக்களும் கூடுதலாக பதிவாகியுள்ளன. அதுகுறித்த புகாரை கொடுத்துள்ளோம். மறுதேர்தல் நடத்த வேண்டும்" என்றார். 

 தேர்தல் பஞ்சாயத்து

அ.ம.மு.க. வேட்பாளரும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வுமான ஏழுமலையிடம் கேட்டதற்கு, ``தோல்வி பயத்தில் அ.தி.மு.க-வினர் உள்ளனர். இதனால்தான் ஓட்டுக்கு முதலில் பணத்தைக் கொடுத்தார்கள். அதன்பிறகு கள்ள ஓட்டுக்களைப் போட்டுள்ளனர். அதுகுறித்து ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது" என்றார். 

பூந்தமல்லி ஒன்றியத்தின் அ.தி.மு.க செயலாளர் முத்துகிருஷ்ணனிடம் கேட்டதற்கு, ``பூத் எண் 195-ல் காலை 11 மணியளவில் பீப் சத்தம் வரவில்லை என்று பொதுமக்கள் என்னிடம் கூறினர். உடனடியாக அந்தப் பூத்துக்குச் சென்று விசாரித்தேன். அப்போது வாக்குப்பதிவு இயந்திரம் கீழே விழுந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனால் தாசில்தார் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரிடம் நான் புகார் தெரிவித்தேன். அவர்கள் வந்து இயந்திரத்தைச் சரிசெய்தனர். பூத் எண் 195-ல் வாக்குப்பதிவுக்கான நேரம் முடிந்தபிறகும் 10-க்கும் மேற்பட்டவர்கள் காத்திருந்தனர். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அந்தச் சமயத்தில் தி.மு.க.வின் பூத் ஏஜென்ட்கள் வெளியில் சென்றுவிட்டனர். இதையடுத்து, அவர்கள் தேவையில்லாமல் எங்கள் மீது குற்றம் சுமத்துகின்றனர். என்னுடைய மகன் சதீஷைக்கூட தாக்கிவிட்டனர். நாங்கள் கள்ள ஓட்டு போடவில்லை. அரசு  ஊழியர்கள், மற்ற பூத் ஏஜென்ட்கள் இருக்கும்போது நாங்கள் மட்டும் எப்படி கள்ள ஓட்டுக்கள் போட முடியும்" என்றார். 

 தேர்தல் பஞ்சாயத்து

சம்பந்தப்பட்ட பூத்தில் பணியாற்றிய அரசு ஊழியர்களிடம் பேசியபோது, ``இந்தப் பூத்தில் மொத்தம் 1,117 வாக்குகள் உள்ளன. அதில் 858 வாக்குகள் பதிவானதாக அனைத்துக் கட்சியினரும் முடிவு செய்தனர். தற்போது சட்டமன்ற தேர்தலுக்கு 37 வாக்குகளும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு 27 வாக்குகளும் கூடுதலாக பதிவாகி உள்ளதாகச் சொல்லி அ.தி.மு.க-வினரைத் தவிர மற்ற பூத் ஏஜென்ட்கள் தகராறில் ஈடுபட்டனர். வாக்குப்பதிவு இயந்திரத்தை நாங்கள் சீல் வைத்துவிட்டோம். இதனால் வாக்கு எண்ணிக்கையின்போதுதான் கூடுதலாக ஓட்டுக்கள் விழுந்துள்ளதா என்பதைக் கண்டறிய முடியும்" என்றனர்.