`கீழ்விஷாரம் துப்பாக்கிச்சூடு!’ -பா.ம.க முன்னாள் எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு | Police booked PMK former MLA and others over Kilvisharam firing incident

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (20/04/2019)

கடைசி தொடர்பு:17:00 (20/04/2019)

`கீழ்விஷாரம் துப்பாக்கிச்சூடு!’ -பா.ம.க முன்னாள் எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு

கீழ்விஷாரம் வாக்குச்சாவடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, பா.ம.க முன்னாள் எம்.எல்.ஏ உட்பட 50 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கீழ்விஷாரம் வாக்குச்சாவடியில் நடைபெற்ற களேபரம்

வேலூர் மாவட்டம், அரக்கோணம் மக்களவை தொகுதிக்குட்பட்ட கீழ்விஷாரம் ராசாத்துபுரம் வாக்குச்சாவடியைப் பார்வையிடுவதற்காக நேற்று முன்தினம் மாலை பா.ம.க-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய இணையமைச்சர் அரங்க வேலு, ஆற்காடு முன்னாள் எம்.எல்.ஏ இளவழகன் காரில் வந்தனர். அவர்களை, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மற்றும் துணை ராணுவப்படை வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதைக்கண்ட அ.தி.மு.க மற்றும் பா.ம.க-வினர் திரண்டுவந்து போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

அப்போது, ஏற்பட்ட களேபரத்தைத் தடுக்க சி.ஆர்.பி.எஃப் வீரர் ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். ஓட்டு போட வந்த பொதுமக்கள் அச்சமடைந்து நாலாபுறமும் தலைதெறிக்க ஓடினர். பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக கீழ்விஷாரம் கிராம நிர்வாக அலுவலர் வடிவேல், ஆற்காடு டவுன் போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில், பா.ம.க முன்னாள் எம்.எல்.ஏ இளவழகன் உட்பட 50 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகிறார்கள்.