அவதூறு வீடியோ விவகாரம்! - புதுக்கோட்டையில் ஆங்காங்கே தொடரும் போராட்டம்; டாஸ்மாக் கடைகள் மூடல்          | Video controversy: protest continues in Pudukottai; Tasmac shops closed

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (20/04/2019)

கடைசி தொடர்பு:18:20 (20/04/2019)

அவதூறு வீடியோ விவகாரம்! - புதுக்கோட்டையில் ஆங்காங்கே தொடரும் போராட்டம்; டாஸ்மாக் கடைகள் மூடல்         

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து, பொன்னமராவதி தாலுகாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், வட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடப்பதால், மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.

ஒரு சமூகத்தினரை மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் தவறாக சித்திரித்து வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோ வெளியிட்டவர்களை உடனடியாகக் கைதுசெய்து, துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாதிக்கப்பட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை வைத்ததோடு, பொன்னமராவதி காவல் நிலையத்தில் கல் வீச்சுத் தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்டனர். இதில், போலீஸ் வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. 5 போலீஸார் மற்றும் பொதுமக்கள் சிலரும் காயமடைந்தனர். அரசுப் பேருந்துகள் உடைக்கப்பட்டன. இதனால், பதற்றமான சூழல் உருவாகவே, பொன்னமராவதி தாலுகாவிற்குட்பட்ட 49 வருவாய் கிராமங்களில், ஏப்ரல் 21-ம் தேதி முற்பகல் 12 மணி வரையிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புக்காக, 1500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். மேலும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பொன்னமராவதியில் கலவரத்தில் ஈடுபட்ட சுமார் 1,100 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவதூறு வீடியோ பரப்பியவர்களைக் கைதுசெய்யக்கோரி, பாதிக்கப்பட்டதாகக்  கூறப்படும் அந்த சமூகத்தினர், பொன்னமராவதி தவிர்த்து புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான், மாவட்டத்தின் சட்டம், ஒழுங்கு பிரச்னையைக் கட்டுக்குள் வைக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் இன்று (ஏப்ரல் 20 தேதி) முழுமையாக மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி அறிவித்தார். அதன்படி, மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் இன்று மூடப்பட்டன. 

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி செய்தியாளர்களிடம் கூறும்போது, ``வாட்ஸ் அப்பில் தவறான காணொளி ஒன்று வெளியிடப்பட்டது. அதில் சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்ய வேண்டும் என்று அளித்த புகாரின் பேரில், பொன்னமராவதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்தநிலையில், சில விஷமிகளால் கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது. எனவே, சட்டம் ஒழுங்கைச் சீர்ப்படுத்த, பொன்னமராவதி தாலுகாவிற்குட்பட்ட 49 வருவாய் கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது, மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர்.

போக்குவரத்தும், மெள்ள மெள்ள சரிசெய்யப்படும். வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விஷமத்தனமான தகவல்களைப் பரப்புபவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வீடியோ வெளியிட்டவர்கள் நிச்சயம் கைதுசெய்யப்படுவார்கள். போலீஸார் துரிதமாகச் செயல்பட்டுவருகின்றனர். எனவே, பொதுமக்கள் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்ள வேண்டாம்"  என்றார்.