மது குடிக்கப் பணம் தராததால் ஆத்திரம்! -மனைவியை எரித்துக் கொன்று கணவன் தற்கொலை | husband kills wife and committed suicide near kudiyatham

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (20/04/2019)

கடைசி தொடர்பு:20:00 (20/04/2019)

மது குடிக்கப் பணம் தராததால் ஆத்திரம்! -மனைவியை எரித்துக் கொன்று கணவன் தற்கொலை

குடியாத்தம் அருகே, மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் மனைவியை எரித்துக்கொன்று, கணவன் தூக்கில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மனைவி கனிமொழி - கணவன் மதிவாணன்

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை அடுத்த ஒலக்காசி ரோடு இந்திரா நகரைச் சேர்ந்தவர் மதிவாணன். இவரின் மனைவி கனிமொழி (37). இவர்களுக்குத் திருமணமாகி 20 ஆண்டுகளாகிறது. இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று, மதுக்குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் மதிவாணன் தகராறு செய்தார். பணம் தராத ஆத்திரத்தில் மனைவி கனிமொழியை கொடூரமாகத் தாக்கிய மதிவாணன், மண்ணெண்ணெய்யை ஊற்றித் தீ வைத்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடிவிட்டார். 

பலத்த தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிய கனிமொழியை அக்கம்பக்கத்தினர் மீட்டு, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு, தீவிர சிகிச்சை பலனின்றி கனிமொழி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக, குடியாத்தம் டவுன் போலீஸார் வழக்குப்பதிவுசெய்து, தலைமறைவாக இருந்த மதிவாணனை வலைவீசித் தேடிவந்தனர்.

இந்தநிலையில், இன்று காலை பேரணாம்பட்டு கொண்டமல்லி சுடுகாட்டில் உள்ள மரக்கிளையில், வேட்டியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் மதிவாணன் சடலமாக மீட்கப்பட்டார். போலீஸார் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மனைவியை எரித்துக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குடியாத்தத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.