``சுற்றுலாவுக்குச் சென்ற இடத்தில்...!" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்' | chennai students faced torcher from professor in college Tour

வெளியிடப்பட்ட நேரம்: 17:08 (20/04/2019)

கடைசி தொடர்பு:21:09 (20/04/2019)

``சுற்றுலாவுக்குச் சென்ற இடத்தில்...!" - மாணவிகளுக்கு பேராசிரியர்கள் கொடுத்த 'ஷாக்'

கர்நாடக மாநிலத்துக்கு கல்விச் சுற்றுலா சென்ற மாணவிகளிடம் `லூஸாக டிரஸ் போடாதே, டைட்டா போடுடா' என்று பேராசிரியர்கள் கூறியதாக கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

மாணவர்கள்

சென்னையின் அருகில் உள்ள பிரபலமான கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் (மாணவ, மாணவிகளின் எதிர்கால நலன்கருதி அவர்கள் பயிலும் கல்லூரியின் பெயரையும் மாணவிகளின் விவரங்களையும் குறிப்பிடவில்லை) கடந்த ஜனவரி மாதம் கர்நாடகா மாநிலம் பெங்களூரு, மைசூர் உள்ளிட்ட இடங்களுக்கு கல்விச் சுற்றுலா சென்றனர். மாணவ, மாணவிகளை 6 பேராசிரியர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். சுற்றுலா சென்ற இடத்தில், மாணவிகளில் சிலரிடம் இரண்டு பேராசிரியர்கள் அநாகரிகமாக நடந்துள்ளதாகக் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

மாணவிகளிடம் பேசினோம். நாங்கள், கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துவருகிறோம். 15 மாணவர்கள், 31 மாணவிகள் கல்விச் சுற்றுலாவுக்காகச் சென்றோம். எங்களை அழைத்துச் சென்ற சீனியர் பேராசிரியர் ஒருவரும், 34 வயதாகும் இன்னொரு பேராசிரியரும் இணைந்து எங்களுக்கு சொல்ல முடியாத அளவுக்கு தொல்லைகொடுத்தனர். `ஒரு மாணவியிடம்,  தனியாக சினிமாவுக்குப் போவோமா' என்று இரவு நேரத்தில் பேராசிரியர் ஒருவர் கேட்டுள்ளார். அந்த மாணவியோ, தனக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறியுள்ளார். அதையெல்லாம் வேறு வழியில்லாமல் சகித்துக்கொண்டோம். கல்லூரிக்கு வந்த பிறகும் சில காரணங்களுக்காக எதையும் சொல்லவில்லை. ஆனால் சில மாணவிகள் மட்டும் சுற்றுலாவில் நடந்ததை பெற்றோரிடம் சொல்லியுள்ளனர்

இந்தச் சூழ்நிலையில்தான், சுற்றுலாவுக்குச் சென்றபோது மாணவிகளிடம் சில மாணவர்கள் அநாகரிகமாக நடந்துகொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால்தான், சுற்றுலாவில் நடந்த உண்மைகளைக் கல்லூரி நிர்வாகத்திடம் கூறினோம். ஆனால், நாங்கள் குற்றம் சுமத்திய பேராசிரியர்கள் மீது பெயரளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களை இனிமேல் மூன்றாண்டுகளுக்கு மாணவ, மாணவிகளை சுற்றுலாவுக்கு அழைத்துச்செல்லக் கூடாது என்று நடவடிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதனால், கல்லூரியில் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். அதன்பிறகு, இந்தப் பிரச்னையை விசாரிக்க குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு, விசாரணை நடத்தி கல்லூரி நிர்வாத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. சம்பந்தப்பட்ட இரண்டு பேராசிரியர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். 

பேராசிரியரால் பாதிக்கப்பட்ட ஒருமாணவி நம்மிடம், ``பெங்களூரு போய் இறங்கியதும் அந்தப் பேராசிரியரின் பேச்சு வேறுவிதமாக இருந்தது. அவர் சீனியர் என்பதால் மற்ற பேராசிரியர்கள் அவரை எதிர்த்துப் பேசமுடியவில்லை. இந்தச் சமயத்தில்தான் அங்குள்ள அருவியில் நாங்கள் குளித்தோம். அப்போது அவர், நீ டிரஸை லூஸாகப் போடதே, டைட்டாகப் போடு என்று என்னிடம் கூறினார். உடனே சார், இதுபோல என்னிடம் பேசாதீர்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டேன். இன்னொரு மாணவியும் அந்தப் பேராசிரியரும் சாலையைக் கடந்தபோது அவரின் செயல்களால் மனத்தளவில் பாதிக்கப்பட்டுள்ளார் மாணவி. 

மாணவர்கள் 

சீனியர் பேராசிரியர் வெளியில் சென்றிருந்தபோது ஒரு மாணவி மயக்கமடைந்துள்ளார். மாணவியை வெளியில் அழைத்துச் சென்ற மாணவர்களையும் அனுமதி கொடுத்த பேராசிரியர்களையும் சீனியர் பேராசிரியர் எச்சரித்தார். அதன்பிறகு அவரிடம் எதையும் பேசாமல் அனைவரும் அமைதியாக இருந்துவிட்டோம்" என்றார் கண்ணீர்மல்க 

 கல்விச் சுற்றுலாவுக்கு மாணவ, மாணவிகளை 5 பேராசிரியர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அவர்களுடன் உதவியாளர் ஒருவரும் சென்றார். அதில் ஒரு பேராசிரியை தற்போது கல்லூரியில் பணியாற்றவில்லை. அவரின் பெயரை சுற்றுலா குழுவில் சீனியர் பேராசிரியர் எப்படிச் சேர்த்தார் என்பது தெரியவில்லை. அதைக் கல்லூரி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்று குற்றம் சுமத்துகின்றனர் மாணவ, மாணவிகள்.  இதையடுத்து, தற்போது குற்றம் சுமத்தப்பட்ட சீனியர் பேராசிரியர்மீது ஏற்கெனவே இதுபோன்ற குற்றச்சாட்டு கல்லூரி நிர்வாகத்திடம் உள்ளது. ஆனால் அதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

 சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்திடம் பேசியபோது, ``இந்தப் பிரச்னை தொடர்பாக விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு அளிக்கும் ரிப்போர்ட் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை நடத்தப்பபடும்" என்றனர். 

 

விசாரணைக்குழுவில் உள்ள பேராசிரியை ஒருவரிடம் கேட்டதற்கு ``நீங்கள் சொல்வது எல்லாம் உண்மைதான். அதுதொடர்பாக மாணவிகள் எங்களிடம் புகார் கொடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு பேராசிரியர்கள் மற்றும் சுற்றுலாவுக்குச் சென்றவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியுள்ளோம். விரைவில் விசாரணைக் குழுவின் அறிக்கை வெளியிடப்படும்" என்றார். 

இதற்கிடையில், இந்த விவகாரத்தை வெளியில் கொண்டுவந்த மாணவ, மாணவிகளின் பட்டியலைச் சேகரித்த கல்லூரி தரப்பினர் சம்பந்தப்பட்டவர்களுக்கு மறைமுக மிரட்டல்களை விடுக்கத் தொடங்கியுள்ளனர். அதாவது, மாணவி ஒருவரின் வீட்டுக்கே சென்று 4 பேர் மிரட்டியுள்ளனர். இன்னும் ஒரு மாணவி, ரயிலில் பயணித்தபோது அவரிடம் ஆதாரங்களைத் தரும்படி கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் பேராசிரியரால் மனத்தளவில் பாதிக்கப்பட்ட மாணவிகள், இனிமேல் விசாரணைக்குழு எல்லாவற்றையும் பாத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். 

 மாணவிகளுக்கு தொல்லைகொடுத்த பேராசிரியர்களின் முகத்திரையைக் கிழிக்கும் ஆதாரங்கள் சுற்றுலாவுக்குச் சென்ற ஒரு மாணவியிடம் உள்ளது. மூன்றாமாண்டு பயிலும் அந்த மாணவி, தேர்வு எழுதியபிறகு ஆதாரங்களை வெளியிடுவேன் என்று சக தோழிகளிடம் கூறியுள்ளார். 

சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் இருவரின் விளக்கத்தையும் கேட்க பல முறை தொடர்பு கொண்டபோது, அவர்கள் பேசவில்லை. அவர்களின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப் பிறகு வெளியிட தயாராக உள்ளோம்.