`ரத்தம் நிற்கவில்லை' - விறகு எடுக்கச் சென்ற இடத்தில் சிறுமிக்கு நேர்ந்த அதிர்ச்சி | 11 year old child injured in mild blast at chennai ICF

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (20/04/2019)

கடைசி தொடர்பு:19:20 (20/04/2019)

`ரத்தம் நிற்கவில்லை' - விறகு எடுக்கச் சென்ற இடத்தில் சிறுமிக்கு நேர்ந்த அதிர்ச்சி

சென்னை ஐசிஎப் பகுதியில் விறகு எடுக்கச் சென்ற இடத்தில் 11 வயதுச் சிறுமிக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. பாழடைந்த அந்த வீட்டிலிருந்து கேட்ட பயங்கர சத்தத்துக்குப் பிறகு சிறுமி ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கிக் கிடந்தார். 

சிறுமி காயமடைந்த வீடு

 சென்னை ஐ.சி.எப், ராஜீவ்காந்திநகர் முதலாவது தெருவில் வசித்துவருகிறார் 11 வயதுச் சிறுமி. இவருக்கு அம்மாவும் அப்பாவும் இல்லை. பாட்டியின் அரவணைப்பில் சிறுமி வளர்ந்துவருகிறார். இன்று பாட்டி வேலைக்குச் சென்றுவிட்டார். சமையல் செய்வதற்கான வேலையில் சிறுமி ஈடுபட்டுள்ளார். விறகு அடுப்பில்தான் சமையல் செய்ய வேண்டும். வீட்டில் விறகு வாங்கக்கூட பணமில்லை. இதனால் அந்தப் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டிலிருந்து விறகு எடுக்க சிறுமி சென்றுள்ளார். விறகுகளை எடுக்க அவர் முயன்றுள்ளார். அப்போது டமார் என்ற சத்தம் கேட்டுள்ளது. அதன்பிறகு ரத்த வெள்ளத்தில் சிறுமி மயங்கிக் கிடந்துள்ளார். 

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடிவந்தனர். அப்போது சிறுமியின் தலையிலிருந்து ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது. உடனடியாக பொதுமக்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து ஐ.சி.எப் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வேலைக்குச் சென்ற சிறுமியின் பாட்டிக்கும் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அவர் அலறியடித்துக் கொண்டு வீடு திரும்பினார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், பாழடைந்த வீட்டில் ஆய்வு நடத்தினர். அப்போது 2 நாட்டு வெடிகுண்டுகள் அங்கிருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 

சிறுமியின் பாட்டி

சிறுமியின் பாட்டி கூறுகையில்,``அம்மாவும் அப்பாவும் அவருக்கு இல்லை. வறுமையோடு தினமும் போராடி வருகிறோம். நான் வேலைக்குச் சென்ற நேரத்தில் சமையலுக்காக விறகு எடுக்க அங்குச் சென்றுள்ளார். அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்துள்ளது. நான் வந்துபார்த்தபோது பேத்தியின் தலையிலிருந்து ரத்தம் வந்துகொண்டிருந்தது. அவளிடம் கேட்டபோது ஒரு விறகு கட்டையை எடுக்க கல்லை தூக்கிப் போட்டதாகக் கூறினார். அந்த இடத்தில்தான் நாட்டு வெடிகுண்டுகள் கிடந்துள்ளன. நல்லவேளை உயிருக்கு ஆபத்து இல்லை. மக்கள் குடியிருக்கும் இடத்தில் யார் இப்படி வெடிகுண்டு வைத்தார்கள் என்று தெரியவில்லை. கஷ்டப்பட்டு பேத்தியை வளர்த்துவருகிறேன். அவளுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. அவளின் கை, தலையில் காயங்கள் உள்ளன" என்றார் கண்ணீருடன் 

 போலீஸாரிடம் கேட்டதற்கு ``தேர்தல் நடந்து முடிந்த நேரத்தில் வெடிகுண்டுகள் எங்களிடம் சிக்கியுள்ளன. அந்த வெடிகுண்டுகளை அங்கு பதுக்கியவர்கள் குறித்து விசாரித்துவருகிறோம். ஏற்கெனவே நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கியவர்களின் விவரங்களைச் சேகரித்துள்ளோம். விரைவில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்

நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட இடம்

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட இடத்தின் உரிமையாளர் யாரென்று விசாரித்துவருகிறோம். மேலும் அந்த வீடு பாழடைந்து காணப்படுகிறது. அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்குத் தெரியாமல் அந்தப் பாழடைந்த கட்டடத்துக்குள் யாரும் சென்றிருக்க முடியாது. இதனால் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். நாட்டு வெடிகுண்டுகளைப் பதுக்கியவர்கள் குறித்து முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகள் வெடித்திருந்தால் சிறுமி உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது. நல்லவேளை ஒரே ஒரு வெடிகுண்டு மட்டுமே தூரத்தில் வெடித்துள்ளது. இதனால்தான் சிறுமி காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்" என்றார். 
 .